Sunday, July 7, 2013

தமிழத் தலைவர்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்!!

Sunday, July 07, 2013
இலங்கை::ஓராண்டு காலமாக எதிர்பார்த்திருந்த மாகாணசபைத் தேர்தல்கள் அடுத்த சில மாதங்களில் நடைபெற வுள்ளன. வடமாகாண சபை, வடமேல் மாகாண சபை மற்றும் மத்தியமாகாண சபை தேர்தல்கள் திட்ட மிட்டபடி விரைவில் நடத்தப்படவுள்ளன. 
 
இந்த சந்தர்ப் பத்தில் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்ட வரலாற் றினை நாம் சற்று திரும்பிப் பார்ப்பது நல்லது. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தான் மாகாணசபை என்ற அமைப்பு இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
 
1980ம் ஆண்டு தசாப்தத்தில் 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தில் தமிழ் மக்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்த குண்டர்கள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக வடபகுதி மக்கள் மீது இந்திய அரசு பரிதாபப்பட்டு அம்மக்களின் உரிமைகளை சமாதானமான முறையில் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் தோன்றிய தீர்வாகவே மாகாணசபை அமைப்புகள் உருவாக்கப் பட்டன.
 
1987ம் ஆண்டில் வடமராட்சியில் எல்.ரி.ரி.ஈ. பயங்கர வாதிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது அன்றைய இந்தியப் பிரதமமந்திரி ராஜீவ்காந்தி, இந்தியாவை மதிக்காமல் சர்வதேச அரங்கில் நடந்து கொள்ளும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் இலங்கையின் ஆகாய எல்லைக்குள் இந்திய யுத்த விமானங்களின் பாதுகாப்புடன் பொருட்களை ஏற்றிவரும் விமானமொன்றை தாழப்பறக்கச் செய்து பருப்பு மூடைகளையும், ஏனைய உணவுப்பண்டங்களை யும் ஆகாயத்தில் இருந்து வீசிச் சென்ற சம்பவம் இந்திய - இலங்கை உறவை மோசமடையச் செய்தது.
 
அதையடுத்து வடபகுதியில் உள்ள தமிழ் மக்களின் உணவுப்பற்றாக்குறையை தீர்த்துவைக்க வேண்டு மென்ற போலியான காரணத்தை முன்வைத்து இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் 1000 மீன்பிடி படகுகளில் உணவை வட பகுதிக்கு பலவந்த மாக ஏற்றிவர இருந்த வேளையில் இருநாடு உறவு மேலும் பாதிப்புக்குள்ளானது.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராஜீவ்காந்தி 24 மணி நேரத்திற்கும் குறைந்த முன் அறிவித்தலுடன் தனது வெளிவிவகார அமைச்சரான முன்னாள் பிரதம மந்திரி பி.பி.நரசிம்மராவ் உட்பட தனது சிரேஷ்ட அமைச்சர் களுடன் விமானம் மூலம் கொழும்பு வந்து சேர்ந்து, அன்று காலையில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவை மறைமுகமாக பலவந்தப்படுத்தி 1987ம் ஆண்டின் இலங்கை - இந்திய நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைத்தார்.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை யும் வடமாகாணத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு மாகாணசபை இலங்கை அரசாங்கத்தினால் சட்டபூர்வ மாக உருவாக்கப்பட்டது.
 
அவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு சில நிமிடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் இலங்கை கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையில் ராஜீவ்காந்தி கலந்து கொண்ட போது ஒரு கடற்படை வீரர் திடீரென்று அவர் மீது தனது துப்பாக்கியின் பின்பக்கத்தினால் தலையில் தாக்க எடுத்த முயற்சி தெய்வாதீனமாக தவிர்க்கப்பட் டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தை அடுத்து ஓரிரு மணித்தியாலங்களில் இந்தியாவின் இராட்சத விமானப் படை விமானங்களில் 75ஆயிரம் இந்திய இராணுவத்தினர் பலாலி விமானத் தளத்தில் பலவந்தமாக கொண்டு வந்து இறக்கப் பட்டார்கள். இவர்கள் இந்திய அமைதி காக்கும் படையினர் என்று அழைக்கப்பட்டனர்.
இதுவே மாகாணசபைகளின் தோற்றம் பற்றிய சுருக்கமான வரலாறாகும். அதையடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங் கள், எல்.ரி.ரி.ஈயினர் தங்களை வளர்த்துவிட்ட இந்தியாவை எதிர்த்து யுத்தம் நடத்திய சம்பவங்களும் இடம்பெற்றன. எந்த நோக்கத்துக்காக மாகாணசபைகள் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில் தொடர் கதையைப் போன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.
 
தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் தங்களின் பிரச் சினைகளை தீர்த்து வைப்பதற்கு தங்களுக்கு கிடைத்த அரசியல் சந்தர்ப்பத்தை இவ்வளவு காலமும் சரியான முறையில் பயன்படுத்த தவறியமையால் தான் இன்று தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளான வடபகுதி மக்களுக்கு தங்களைத் தாங்களே நிர்வகித்து தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு வழங்கியிருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பமாக இந்த வடபகுதி மாகாணசபைத் தேர்தல் அமைந்துள்ளது.
தமிழ் மக்களின் தலைவர்கள் பல்லாண்டு காலமாக தங்களுக்கு கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை தவறவிட்டு தமிழ் மக்களின் துயரத்தை தீர்த்து வைக்காமல் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை இந்த தடவையாவது நிறுத்திவிட்டு, தங்கள் மக்களின் நல்வாழ்வுக்கு பயன்தரக்கூடிய வகையில் வடமாகாண சபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் வெற்றிகரமாக நடத்தி ஆட்சி அமைப்பதற்கு முன்வர வேண்டும்.
 
தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆயுதம் தாங்கி துப்பாக்கி முனையில் தீர்த்து வைக்கலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்த அமைப்புகள் இன்று சீர்குலைந்து போய் அழிவுற்றுள்ளன.
எனவே, தமிழர்களின் தலைமைத்துவம் யதார்த்தபூர்வமாக சிந்தித்து வடமாகாணசபையை ஏற்படுத்தி அதன் மூலம் அந்த மாகாணத்தை தேனும் பாலும் ஊற்றெடுக்கும் ஒரு புண்ணிய பூமியாக மாற்றுவதற்கு ஏற்றுக் கொள்ள முடியாத கொள்கைகளை மூட்டைகட்டிவிட்டு நல்லதொரு முடிவை எடுப்பது அவசியமாகும்.
 
இதுவிடயத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது கட்சி வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்த கருத்தை நாம் பாராட்ட விரும்புகிறோம்.

No comments:

Post a Comment