Sunday, July 07, 2013
இலங்கை::இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்தும் பலமாக இருப்பதுடன், அது சீரான நிலையில் முன் நகர்ந்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய அரசின் முக்கியஸ்தர் களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இரு நாடுகளும் பரஸ்பர புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுவதாக கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறினார்.
இந்தியாவானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதொரு அயல் நாடு. இந்தியா இலங்கையின் உறவு என்பதை ஜனாதிபதி பல்வேறு தடவைகள் கூறியுள்ளார். அடிப்படையிலேயே ஐந்து இந்திய அமைச்சர்கள் இவ்வருடத்தில் மாத்திரம் இலங்கை வந்து சென்றுள்ளார்கள். இவற்றை வைத்துப்பார்க்கும் போது இரு நாட்டுக்கும் இடையிலான உறவு எவ்வளவு பலமான நிலையில் உள்ளது என்பது தெளிவாகப் புலனாகும் என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இச்சந்திப்பின் போது கூறியுள்ளார்.
வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ நன்றிகளைத் தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் பாராட்டியுள்ளார்.
அரசியலமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்துக் கட்சிகளும் பங்குகொள்வதன் அவசியத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பில் வலியுறுத்தியிருந்தார்.
No comments:
Post a Comment