Wednesday, July 3, 2013

திருச்சியில் நிறுத்தி அதிரடி சோதனை வைகை எக்ஸ்பிரசுக்கு குண்டு மிரட்டல் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு!

Wednesday, July 03, 2013
திருச்சி::மதுரையில் இருந்து சென்னைக்கு இன்று புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, திருச்சியில் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகளை இறக்கிவிட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் இருந்து தினமும் காலை 6.55 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் வழக்கம்போல புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் காலை 8.55 மணிக்கு திருச்சி வந்து 9 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு சென்னையில் உள்ள ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘திருச்சியில் இருந்து பேசுகிறேன். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. 9 மணிக்கு வெடிக்கும்’ என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இந்த தகவல் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. திருச்சி ரயில் நிலையமும் உஷார்படுத்தப்பட்டது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 8.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தது. உடனடியாக அனைத்து பயணிகளையும் கீழே இறங்கும்படி போலீசார் கூறினர். இதற்கிடையே பயணிகளுக்கு வெடிகுண்டு பற்றிய தகவல் தெரியவந்தது. அலறியடித்துக் கொண்டு உடைமைகளுடன் பயணிகள் இறங்கினர்.
டிஎஸ்பி ராஜவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் இன்ஜின் முதல் கடைசி பெட்டி வரை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆனால் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே, செல்போன் எண் மூலம் போலீசார் துப்பு துலக்கியதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருச்சியை சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் விரைந்து உள்ளனர். வெடிகுண்டு தகவல் புரளி என தெரியவந்தது. 2 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நீடித்ததால், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகள், வெகு நேரம் திருச்சி ரயில் நிலையத்திலேயே முடங்கினர்.

No comments:

Post a Comment