Wednesday, July 3, 2013

விடுதலை என்பது தனது மண்ணில் சுதந்திரமாக வாழ்வது தான் பொருளாகும்.ஆனால் கடந்த 30 வருட காலம் விடுதலை என்ற போர்வைில் மக்களை அச்சுறுத்தி அவர்களது சுதந்திர நடமாட்டத்தை இல்லாமல் செய்த யுகத்தையே காணமுடிந்தது: அதாவுல்லா!

Wednesday, July 03, 2013
இலங்கை::அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் அழைப்பின் பேரில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுரட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள்  மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்து நானத்தான் பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத்தை  திறந்து வைத்தார்.
 
விடுதலை என்பது தனது மண்ணில் சுதந்திரமாக வாழ்வது தான் பொருளாகும்.ஆனால் கடந்த 30 வருட காலம் விடுதலை என்ற போர்வைில் மக்களை அச்சுறுத்தி அவர்களது சுதந்திர நடமாட்டத்தை இல்லாமல் செய்த யுகத்தையே காணமுடிந்தது என தெரிவித்துள்ள உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா எவ்வித உரிமைகளையும் பெற்றுத்தர முடியாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.
 
இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு  மேலும் உரைாயற்றுகையில் கூறியதாவது -
 
கடந்த 30 வருட காலமாக வடக்கிலும்,கிழக்கிலும் யாரும் அபிவிருத்திகளை செய்ய முன்வரவில்லை.அன்று மின்சார பிறப்பாக்கிகளை,தொலைபேசி நிலையங்களை, வைத்தியசாலைகளை.மற்றும் இன்னோரன்ன பெறுமதியான சொத்துக்களை எல்லாம் பயங்கரவாதம் தாமாகவே அழித்து சேதப்படுத்தி மக்களது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகளை செய்தது.அரச அதிகாரிகள் தமது பணிகளை செய்யவிடாமல் அவர்களை விரட்டியடிக்கும் பணியினையும் செய்தது,நாங்களே அபிவிருத்திகள் தேவையில்லை என்று கூறிக் கொண்டு,எமது மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க போராடுகின்றோம் என்று கூறியதை இன்னும் மறந்துவிட முடியாது.
அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அந்த மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காது,அந்த மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தமது பிள்ளைகளை உயர் பாடசாலைகளிலும்,இந்தியாவிலும் சென்று கற்க வைக்கும் அவலத்தனமான ஒரு அரசியலை செய்து கொண்டு,குழுக்காளக பிரிந்து ஆயுதம் ஏந்தி,தமக்கு எதிரானவர்கள் என்பதினால் தமது சகோதரர்களையே சுட்டுக் கொண்ட அரசியல் வாதிகள் குறித்தும் எமது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
 
இன்று இந்த மக்கள் அச்சமற்ற சூழ் நிலையில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் காரணம் என்பதை மறந்துவிட முடியாது. மக்கள் இன்று ஆலயங்களுக்கு அச்சமின்றி சென்று தமது மத வழிபாடுகளை செய்கின்றனர். பாடசாலைக்கு மாணவர்கள் சென்று கற்கின்றனர், அரச அதிகாரிகள் தமது பணிகளை அச்சமின்றி செய்கின்றனர்.இது தான் மக்களுக்கான விடுதலையாகும்.
மன்னார் மாவட்டத்திற்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். அதுவும் உத்தியோகபூர்வமாக முதற் தடவையாக வருகைத்தந்துள்ளேன்.1976 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விமானத்தில் சென்று அதன் பிறகு இராமானுஜம் என்ற கப்பல் மூலம் தலைமன்னாருக்கு வந்தேன்.
 
ஒரு நாட்டினதும் பிரதேசத்தினதும் அபிவிருத்தி என்பது,அப்பிரதேசத்தின் பாதைகளின் அபிவிருத்தியில் தங்கியுள்ளது. நவீன மயப்படுத்தப்பட்ட பாதைகளால் கிராமங்களின் வருமானம் அதிகரிக்கின்றது. அதிமான தொழில் வாய்ப்புக்களை கொண்டுவருவதற்கு அது வழி வகுக்கின்றது. அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியினால் இன்று இந்த அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கொண்டுவர முடிந்தது என்றும் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.
 
இப்பிரதேசம் மிகவும் எழில்மிக்க ஒரு பிரதேசமாகும். பார்ப்பதற்குக் கூட சந்தோசமாகவும் உள்ளது. இப்பிரதேசத்தை பொறுத்தவரை தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று எல்லா சமூகத்தினரும் மிகவும் சந்தோசமாக வாழ்கின்றனர்.
 
கடந்த யுத்த காலங்களில் மக்கள் சந்தோசமாக இவ்வாறு வாழவில்லை. மக்கள் தெளிவாக இருந்தாலும் சிலர் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். மக்களுக்கு இனவாதத்தைப் பாய்ச்சினார்கள்.
எந்தளவுக்கு என்றால் யுத்த காலத்தின் போது நான் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த போது குடிநீர் வினியோகம் வழங்க யாழ்ப்பாணம் சென்றிருந்த போது சிங்கள குடிநீர் வேண்டாம் என்று மக்கள் கோசமிட்டதை இன்று கூட எனது மனதில் இருந்து அகழவில்லை. அந்தளவிற்கு மக்களின் மனதை அவர்கள் மாற்றியிருந்தார்கள்.
 
குறிப்பாக அவர்களுக்கு அடங்காத கல்விமான்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் பொதுமக்களையும் நாள்தோறும் கொன்றுகுவித்தார்கள். இன்னும் பல சொல்லொன்னா அநியாயங்களையும் செய்தார்கள். எந்த மதத்திலும் கொலை செய்யச் சொல்லவில்லை. இருந்தாலும் தர்மத்தை மீறி செய்தார்கள். இறுதியில் என்ன நடந்தது?
இறை தண்டனை. சண்டியன் வாழ்வு சந்தியில். எல்லா செயல்களுக்கும் இறைவன் தீர்ப்பளிப்பான். அதுதான் நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையாகும். இன்று நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றோம். நாடு பூராக நிறைய அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.
 
அதில் ஓர் அங்கமாக உள்ளுராட்சித் துறையில் வட்டாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். வட்டாரத்தில் உள்ளவருக்கு நாம் வாக்களிக்கும் போது நமக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயிக்கப்படும். அவர் மிகவும் வலுவானவராக இருப்பார். அவருக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்படும். வாக்களித்த மக்களுக்கு நிறைய வேலைகளைச் அவர் செய்வார்.
இவற்றையெல்லாம் நாட்டின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டே செய்கின்றோம். இன்று நானத்தான் பிரதேச சபைக் கட்டிடம் கூட திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் நான் அறிந்தேன் நானத்தான் பிரதேச சபை தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் பிரதேச சபை என்று. அப்படி நாம் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் போது யாருடையது, எந்த இனம், எந்த கட்சி என்று பார்ப்பதில்லை. அபிவிருத்திகள் எனும் போது பொதுவாகவே  நடைபெறுகின்றன.
 
நானத்தான் பிரதேச சபையின் தலைவர் என்னிடம் நிறைய கோரிக்கைகளை முன்வைத்திருகின்றார். வாழ்கின்ற மக்களுக்காக விரைவில் அதனை செய்து தருவதாக நான் உறுதியளித்திருக்கின்றேன்.
 
மேலும் இந்தப் பிரதேசத்தில் ஒரு திறமையான அமைச்சர் இருக்கிறார. றிசாட் பதியுத்தீன் இப்பிராந்தியத்திற்கு நிறைய சேவைகளை செய்து கொண்டு வருகின்றார். மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் பணி செய்கின்றார். நானத்தான் பிரதேச சபை அமைச்சர் றிசாட் பதியுத்தீனை தனது அபிவிருத்திக்காக நிறைய பாவிக்கவேண்டும். மக்களுக்காக சேவை செய்ய அவர் தயாராக இருக்கின்றார்” எனவும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுக் மற்றும் பிராந்திய அரசியல் தலைவர்களும், அரச உயர் அதிகாரிகளும், பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment