Friday, May 31, 2013

புதிய வடக்கு அதிவேக பாதை உட்பட இலங்கையின் போக்குவரத்துத் துறைக்கு சீனா முதலீடு செய்யவிருக்கிறது!

Friday, May 31, 2013
இலங்கை::கொழும்பு - யாழ்ப்பாணம் புதிய அதிவேக பாதை உட்பட பாதைகள் வலையமைப்பு புகையிரதப்பாதைகள் மற்றும் பல அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இலங்கையின் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.
 
நேற்று பீஜிங்கில் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது செய்துகொண்ட பல உடன்படிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
 
மேலும் உத்தேச கொழும்பு – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை பணிகளின் ஒரு பகுதியாக கொழும்பு – கண்டி – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகள் மற்றும் மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான தெற்கு அதிவேக பாதையை விரிவுபடுத்தும் பணிகள் என்பவற்றிற்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவும்.
பல்வேறு துறைகளில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
இவ்வருடம் மார்ச் மாதம் சீனாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஷீ ஜின் பிங் அவர்களுக்கு பாராட்டுத்தெரிவித்த ஜனாதி, சீன மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இவ்வெற்றி எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கிழக்காசிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பல விஜயங்கள் சீனாவின் அரசியல் பொருளாதார சமூக நிலைப்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள பெரிதும் உதவியதாகவும் சீனாவின் புதிய நிருவாகத்துடன் நெருங்கி செயலாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
 
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சீனாவுக்கான நான்காவது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் உறுதிப்பாட்டைக் குறிக்கின்றது என்றும் தெரிவித்தார். அத்துடன் தனது ஆட்சிக்காலத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு பேச்சுவார்ததைகளின்போது வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நோக்கி செயலாற்றுவதற்காக இரண்டு குழுக்களை அமைப்பதற்கு இரு நாடுகளும் ஓர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
 
 இதன்மூலம் சீன சந்தையில் இலங்கை தயாரிப்புகளான ஆடைகள், இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், தேயிலை, இறப்பர் போன்ற பொருட்களுக்கு விரிவான சந்தை வசதிகிட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment