Monday, May 27, 2013
ராய்ப்பூர்::மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்தார்.
ராய்ப்பூர்::மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், ஜகதால்பூர் அருகே சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் பரிவர்த்தன் யாத்திரை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 27 பேர் உயிரிழந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா உள்பட 32 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூர் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியினரிடையே பேசியதாவது:
மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் நந்தகுமார் பட்டேல், உதய் முதலியார் உள்ளிட்டோர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். எனினும், மாவோயிஸ்ட்டுகளிடம் அரசு ஒருபோதும் அடிபணியாது.
தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்களை நீதியின் முன்பு நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் அமைதிக்கும், இப்பகுதியின் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் ஆவர்.
நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்ததில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் வரலாறு படைத்துள்ளனர். பல்வேறு சவால்களை நமது கட்சி எதிர்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல் நமக்கு மேலும் ஒரு சவாலாக உள்ளது. இதைத் தகர்த்துவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தத் தாக்குதல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையைத் தூண்டுவதாக அமைய வேண்டும் என்றார் மன்மோகன்.
முன்னதாக, ராய்ப்பூர் சென்ற மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மாவோயிஸ்ட் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தாக்குதலில் உயிரிழந்த மாநில காங்கிரஸ் தலைவர் நந்த குமாரின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் உயிரிழந்த மற்ற அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மாநில அரசை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.
முதல்வர், ஆளுநருடன் ஆலோசனை: மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு நிலவரம் குறித்து மாநில முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மன்மோகன் சிங் கேட்டறிந்தார். பின்னர் நிலைமையைக் கையாள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், ஆளுநர் சேகர் தத்துடன் இந்தச் சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, சோனியா காந்தி, மாநில முதல்வர் ரமண் சிங் மற்றும் மத்திய உள் துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு உள்ளான ஜகதால்பூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய இணை அமைச்சர் சரண்தாஸ் மஹந்த், மாநிலங்களவை உறுப்பினர்கள் மோதிலால் வோரா, மோஷினா கித்வாய் மற்றும் இதர மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment