Friday, May 31, 2013

வடக்கில் காணி சுவீகரிப்பு வழக்கு: பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

Friday, May 31, 2013
இலங்கை::வடக்கில் மக்களுக்கு சொந்தமான ஆறாயிரத்து 381 ஏக்கர் காணி அரசாங்கத்தால சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களின் பிரதிவாதிகளை ஜூலை10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பான இந்த காணியை அரசாங்கம் சுவீகரிக்க முயல்வதாக தெரிவித்து இரண்டாயிரத்து 176 பேர் இந்த இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.
 
குறித்த இரண்டு மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் S.ஸ்கந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்களில் யாழ் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர், காணிமற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன்,யாழ் மாவட்ட நில அளவையாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
பொதுத் தேவைக்கு எனத் தெரிவித்து கைப்பற்றப்படவுள்ள இந்தக் காணிகளில் பூர்வீகமாக தாம் வசித்து வந்ததாகவும் இவற்றை அரசாங்கம் சுவீகரிக்கும் பட்சத்தில் தாம் நிர்க்கதிக்குள்ளாவதாகவும் மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
வலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான
ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பிரதிவாதிகளின்  இந்த செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான மனுக்கள் மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மேன்முறையீடு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வேண்டுகோள் தொடர்பில் தீர்ப்பு வழங்குவது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment