Monday, May 27, 2013
இலங்கை::முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சரியாக புரிந்து கொள்ளாமல் எடுத்ததெற்கெல்லாம் ராணுவத்தினரைக் களத்தில் இறக்கி விடயத்தை மேலும் சிக்கலாக்ககி விடுகின்றார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை::முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சரியாக புரிந்து கொள்ளாமல் எடுத்ததெற்கெல்லாம் ராணுவத்தினரைக் களத்தில் இறக்கி விடயத்தை மேலும் சிக்கலாக்ககி விடுகின்றார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை எற்பாட்டில் சாய்ந்தமருதில் நடைபெற்ற மர்ஹூம் மீராசாகிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
கல்முனை மாநகர மேயர் சிராஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் மேலும் பேசுகையில் கூறியதாவது;
இன்று முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் முஸ்லிம்கள் வெளிப்படுத்துகின்ற உணர்வுகள் ஒரு நோய்க்கான அறிகுறிகள் மட்டுமே. அதற்கே பரிகாரம் காண வேண்டும். ஆனால் அதனை விடுத்து நோயை குனப்படுத்த நினைத்துக் கொண்டு வைத்தியரின் ஆலோசனையும் அறிவுரையில்லாமல் எல்லா மருந்துகளையும் உட்கொண்டால் நிலைமை மோசமாகி விடும்.
ஹர்த்தால் விடயத்தில் அரசாங்கம் மிகப்பெரிய தவறினை விட்டு
விட்டது!
இவ்வாறே பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நோய் அறிகுறிக்கு பரிகாரம் காண்பதற்குப் பதிலாக நோய்க்கு வைத்தியம் செய்ய முற்படுகின்றார். இதனால் விடயம் விபரீதமாகி விடுகிறது.கிழக்கில் முஸ்லிம்கள் ஹர்த்தால் கடையடைப்பு செய்வதற்கு ஒரு துண்டுப் பிரசுரம் வெளிவந்தால் போதும் ராணுவத்தினர் பள்ளிவாசல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் உலமாக்களும் ராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகின்றனர்.
ஹர்த்தாலை கைவிட நடவடிக்கை எடுங்கள் என்று வற்புறுத்தப்படுகின்றனர். அதனை உலமாக்கள் வந்து ஊருக்குள் சொன்னால் என்ன நடக்கும்? இளைஞர்கள் கொந்தளிக்கின்றனர்.
அதனால் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போன்று அந்த ஹர்த்தால் நூறு வீதம் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஹர்த்தால் கடையடைப்பு விடயத்தில் அரசாங்கம் மிகப்பெரிய தவறினை விட்டு விட்டது.
இது குறித்து அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு விலாவாரியாக தெளிவுபடுத்தியுள்ளேன். முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் பற்றி நான் கதைத்ததைத் தொடர்ந்து மற்ற முஸ்லிம் அமைச்சர்களும் நிறைய கதைத்தார்கள்.
அதேவேளை நான் ராணுவ பிரசன்னம் பற்றி சொன்னதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, நீங்கள் இப்படி ஒரு விடயத்தைக் கதைப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவையும் இங்கு அழைத்திருப்பேன் என்றார்.
கோத்தபாயவிடம் கதைப்பது என்றால் தயக்கம் வருகிறது!
அதற்கு நான் சொன்னேன் ஐயோ ஆளை விடுங்க சேர் என்று. ஏனென்றால் ஜனாதிபதியுடன் எதையும் கதைத்து தெளிவுபடுத்தலாம்.ஆனால் கோத்தபாயவிடம் கதைப்பது என்றால் தயக்கம் வருகிறது.
அவர் ஒரு ராணுவ அதிகாரி என்ற ரீதியில் எல்லாவற்றையும் ராணுவ பாணியிலேயே அணுக முற்படுகின்றார். இதுதான் எமக்கு இன்றுள்ள பிரச்சினையாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அரசு ஏன் மௌனம் காக்கிறது. பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இந்த விடயத்தில் அமைதி காக்கப்படுவதாக முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர். ஹலால் பிரச்சினையை ஒரு சாட்டாக வைத்துத்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாதம் தலை தூக்கியுள்ள போதிலும் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளன.
யுத்த வெற்றியின் பின்னர் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செல்வாக்கு மிகவும் அதிகரித்துள்ளது. பழுத்த அரசியல் முதிர்ச்சியும், ஆழ்ந்த அனுபவமும், சிறந்த ஆளுமையும் கொண்டவராக இருக்கும் அவர் கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களாக இருந்தவர்களை விட மேலானவராக மதிக்கப்படுகின்றார்.
இந்த அரசாங்கத்தில் நாங்கள் முழு விருப்பத்தில் போய் இணையவில்லை என்பது பகிரங்கமாகக்கூறிய விடயமாகும்.கட்சியும் மக்களும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்றால் அரசாங்கத்தோடு இருந்தாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஜனாதிபதியும் ஓரளவுக்காவது பலமான இயக்கம் தன்னோடு இருக்க வேண்டும் என்ற உணர்வோடு வைத்துக் கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்துடன் இணைந்த காலத்திலிருந்து கட்சியை பாதுகாக்க வேண்டும். மு.கா. முழுமையாக அழிக்கப்படுவதற்கு நாங்களாக வழிசமைத்து கொடுத்து விடக்கூடாது என்பதில் பக்குவமாகவும் மிகக்கவனமாகவும் இருந்து வருகின்றேன்.
கட்சியும் மக்களும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்றால் அரசாங்கத்தோடு இருந்தாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஜனாதிபதியும் ஓரளவுக்காவது பலமான இயக்கம் தன்னோடு இருக்க வேண்டும் என்ற உணர்வோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் படாதபாடுபடுகின்றோம்.
ஆனால் தவறு செய்கின்ற போது அதனைச் சுட்டிக்காட்டுகின்ற பணியை நாங்கள் செய்யாமல் விடவில்லை. ஹலால் பிரச்சினை வந்த சமயத்தில் முஸ்லிம் தலைவர் முகம் கொடுக்கவில்லை. அவர் கொஞ்சம் பின்வாங்கிக்கொண்டே இருந்தார் என்ற ஒரு பெரிய விமர்சனம் இருந்தது. அது அப்படியல்ல.
இந்த ஹலால் விவகாரம் வந்த நாளிலிருந்து அரசாங்கம் உடனடியாக அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்தது. இந்த உப குழு முடிவு ஒன்றை எடுப்பதற்கு முன் குழுவிலுள்ள எவரும் இதுபற்றி பேசக்கூடாது என்ற ஒரு தீர்மானத்தையும் எடுத்தது. இதனால் நாங்களாகவே எங்களது வாய்களுக்கு பூட்டு போட்டுக்கொண்டோம். ஆனால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அதனை மீறி நினைத்த நேரமெல்லாம் அடிக்கடி செய்தியாளர் மாநாடுகளை நடாத்திக் கொண்டு வாக்குச் சேகரிப்பதற்காக வசதிகளைத் தேடிக்கொண்டார்.
தற்பொழுது அவர் வடக்கில் தேர்தல் நடாத்தக்கூடாது அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தனி நபர் பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்போகின்றோம் என பிடிவாதமாக பேசிக்கொண்டிருக்கிறார்.
இப்படி செயற்படுவதன் மூலம் சிங்கள மக்களுக்கு மத்தியில் உள்ள தீவிரவாதப் போக்குள்ளவர்களின் வாக்குகளை கவர்ந்து கொள்ளலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதான் எங்கள் பார்வையில் ஜனாதிபதிக்கு ஒரு தடுமாற்றம் உள்ளது.
நான் இது பற்றி ஜனாதிபதிக்கு தெளிவாகக் கூறியுள்ளேன். தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் பொதுபலசேனா ஹெல உறுமய போன்றவர்கள் உங்களிடம் உள்ள வாக்குகளைப் பிரித்துக் கொண்டு போய் விடுவார்கள் என அச்சப்படுவதாக இருந்தால் அந்த வாக்குகளுக்கு உரிமை கொண்டாடக்கூடியவர்கள் உங்களைத்தவிர வேறு யாராலும் முடியாது. இதனால் தீவிரவாதப் போக்குள்ளவர்களின் வாக்குகளைப் பற்றி ஜனாதிபதி கவலைப்படக்கூடாது. உறுதியாக சில முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும்.
இன்று நாட்டில் ஒரு குழப்பத்தைக் கொண்டு வந்து தங்களின் ஆட்சிக்கு வேட்டு வைப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதனை உணர வேண்டும் என ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன்.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பலஸ்தீனத்திலும் அநியாயங்கள்; இலங்கை முஸ்லிம்களுக்கு முதலைக் கண்ணீர்!
இந்த அரசுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கின்றன என்றதொரு பார்வை இருந்து கொண்டிருக்கின்றது. இன்று மியன்மாரிலும் இலங்கையிலும் நடப்பதை பார்த்தால் முஸ்லிம்களின் நண்பர்களாக காட்டிக் கொள்ளும் மேற்குலக நண்பர்கள் எல்லாம் உண்மையான நண்பர்கள் அல்ல என்பதை அறியலாம்.
அவர்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பலஸ்தீனத்திலும் செய்யும் அநியாயங்கள் இதற்கு மத்தியில் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு அநியாயம் நடத்தியது என முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதனைக்கண்டு மயங்கிப் போகும் ஒரு இயக்கமாக நாங்கள் மாற முடியாது.
இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஜெனிவா தீர்மானத்திற்குள்ளும் தற்போது நுழைந்துள்ளோம் என்று காட்ட வருபவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் எமது பாதுகாப்புச் செயலாளருக்கு ஜனாதிபதியின் மற்ற சகோதரர்களுக்கு இது விளங்காமல் இருக்கலாம். அநியாயமாக அபாண்டமாக எல்லா செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் தலையில் போடுகின்றார்கள். ஆனால் நேர்மையாக ஜனாதிபதியுடன் சண்டை பிடிக்க என்னால் முடியும். இதனை நான் நேரடியாகக் கண்டு கொண்டு வருகிறேன்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேசும் ஒரு இயக்கமாக நாங்கள் பாதிக்கப்படுகின்ற போது அச்சமின்றி நேர்மையாக சுட்டிக்காட்டுவதற்கு தயங்காத ஒரு இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் என்றும் இருக்கும் என்பதை இந்த அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகின்றோம்” என்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment