Thursday, May 30, 2013

சட்டவிரோதமாக வரும் இலங்கை.தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவர்: சென்னையில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கான துணைத் தூதர் டேவிட் ஹோலி!

Thursday, May 30, 2013
சென்னை::படகுகள் மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை தமிழர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சென்னையில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கான துணைத் தூதர் டேவிட் ஹோலி தெரிவித்தார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
 
இலங்கை தமிழர்கள் உட்பட பல்வேறு தரப்பட்ட மக்களிடம் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் போலியான வாக்குறுதிகளை அளித்து பணம் பறிக்கும் நபர்கள் உள்ளனர். அவர்களை நம்பி படகுகள் மூலம் அபாயகரமான பயணத்தை அந்த மக்கள் மேற்கொள்கின்றனர். இத்தகைய படகு பயணத்தின் போது பெரும்பாலான மக்கள் உயிரிழக்கின்றனர். 
 
இது போன்று படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வருபவர்களை நாவ்ரு, பப்புலா, நியுகிளி போன்ற தீவுகளுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு அமல்படுத்தி உள்ளதால் படகுகள் மூலம் வருபவர்களை தடுக்கவும், கடலில் அவர்கள் உயிரிழப்பதை தடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி இலங்கை தமிழர்கள் உட்பட சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1177 இலங்கை தமிழர்கள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment