Monday, May 27, 2013

இனவாத செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் நிலைமை இந்தளவிற்கு மோசமாகி இருக்காது: றஊப் ஹகீம்!

Monday, May 27, 2013
இலங்கை::தற்போது அரசாங்கம் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கு நாடுகள் அரசாங்கத்தின் மீது பல அழுத்தங்களை பிரயோகித்து ஸ்திரத்தன்மையை இல்லாமால் செய்து அதனை வீழ்த்துவதற்கும் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக சில சிங்கள, பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்துள்ளன என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹகீம் தெரிவித்தார்.
 
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இளைஞர் அமைப்பின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைப்பின் தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் நடாத்தப்பட்ட மின்னொளியிலான லீடர் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் ஒரு தீய சக்கதியினர் இருந்து கொண்டு செயற்படுவதாக பலத்த சந்தேகம் நிலவுகின்றது.
இவ்வாறான சந்தேகம் கொள்ளும் வகையிலான செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் ஆரம்பத்திலேயே மதவாத, இனவாத, தீவிர அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நிலைமை இந்த அளவிற்கு மோசமாகி இருக்காது.
 
இன்று முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ள போதிலும் இந்த நடவடிக்கை ஒரு நோய்க்கான அறிகுறிகள் மட்டுமே. அந்த நோயை குனப்படுத்த நினைத்துக்கொண்டு வைத்தியரின் ஆலோசனையும் அறிவுரையில்லாமல் எல்லா மருந்துகளையும் உட்கொண்டால் அந்த நோய்க்கான அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்வதால் எந்தப் பயனுமில்லை.
 
உரிய முறையில் வைத்தியரை நாடி அவரின் ஆலோசனைகளுக்கு மத்தியில் நோயைக் கண்டுபிடித்து அதற்கான மருத்துவத்தையே செய்ய வேண்டும்.
அது இங்கு நடைபெறுவதாக இல்லை. இன்றைய சூழ் நிலையில் உள்நாட்டு அரசியல் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றென்னி வழிமேல் விழிவைத்துக் கொண்டு பகல் கனவைக் கண்டு கொண்டிருக்கின்றனர்.
 
அந்த முட்டால்தனத்தை முஸ்லிம் காங்கிரஸோ அதன் தலைமையோ ஒரு போதும் செய்யாது இது ஒரு தனி மனிதனின் கட்சியல்ல. இது மக்களின் சக்தி கொண்ட ஒரு கட்சியாகும் இந்த மக்கள் சொல்வதை மட்டுமே செய்யும். என்ற விடயத்தை இந்த ஊர் மாகாண அமைச்சருக்கும் பல தில்லுமுள்ளுகளைச் செய்யும் கட்சினருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
 
பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இந்த விடயத்தில் அமைதி காக்கப்படுவதாக முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர். ஹலால் பிரச்சினையை ஒரு சாட்டாக வைத்துத்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாதம் தலை தூக்கியுள்ள போதிலும் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளன.
 
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பின் ஊடாக அரசு பல முக்கிய விடயங்களை சாதித்து வருவது இன்று நாம் எல்லோரும் அறிந்த விடயங்களே. இவ்வளவும் செய்த முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் இந்த அரசாங்கத்தை விட்டு வலிந்து வெளியேற முடியாது. எங்களை பகைத்துக் கொண்டு அரசு ஆட்சியை தக்கவைக்க ஒருபோதும் முடியாது.
 
வட, கிழக்கு மாகாண கரையோர பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் பலவற்றை ஆயுதப்படைகள் அபகரித்து அதற்காக பல்வேறு காரணங்களைக் காட்டி வருவது ஒரு நல்ல செயலல்ல. அவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளில் கபானாக்கள் என்று சொல்லக் கூடிய சுற்றுலா கொட்டில்கள் அமைக்கப்பட்டு வருவதாக பல குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன.
 
அண்மையில் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கடையடைப்பு விடயத்தில் கூட அரசாங்கம் மிகப்பெரிய தவறினை விட்டு விட்டது.
விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் கடையடைப்பு விடயத்தில் இராணுவத்தினர் பள்ளிவாசல்களுக்கும் மத்ரஸாக்களுக்கும் சென்று உலமாக்களையும், முக்கியஸ்தர்களையும் விசாரணைக்காக இராணுவ முகாம்களுக்கு வருhமாறு வற்புறுத்தலுக்கு மத்தியில் செயற்பட்ட விடயம் இளைஞர்களை இன்னும் இன்னும் விசனத்தை உண்டுபன்னும் செயலாக அமைந்து விட்டது.
 
அதனால் அந்த ஹர்த்தாலை மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்று ஒரு தூண்டும் செயலாகவே அது அமைந்து விட்டது.
யுத்த வெற்றியின் பின்னர் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செல்வாக்கு மிகவும் அதிகரித்துள்ளது. பழுத்த அரசியல் முதிர்ச்சியும், ஆழ்ந்த அனுபவமும், சிறந்த ஆளுமையும் கொண்டவராக இருக்கும் அவர் கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களாக இருந்தவர்களை விட மேலானவராக மதிக்கப்படுகின்றார்.
அவரிடம் எமது பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாத பொல்லாதவற்றையெல்லாம் சொல்லி எப்படியோ அரசை விட்டு முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி விடலாம் என்று செயற்பட்டு வந்தவர்களுக்கு இப்போது ஒன்றும் செய்யமுடியாதளவில் காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது’ என்றார்.
 
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி;த் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.ஏ.உவைஸ், அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உப தலைவரும், தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன், உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment