Thursday, May 30, 2013
சென்னை::தொழிலதிபர்களை குறிவைத்து ஸ்கிம்மர் கருவி மூலம் அவர்களது ஏ.டி.எம். கார்டுகளை போலியாக தயாரித்து ரூ. 100 கோடிக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை மற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வசிக்கும் தொழிலதிபர்கள் தங்களது ஏ.டி.எம்.கார்டுகளில் இருந்து யாரோ நூதன முறையில் பணம் திருடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் எடுத்து இருப்பதாக தங்களது செல்போனுக்கு வரும் தகவல் கண்டு அதிர்ச்சியடைந்து வங்கிகளுக்கு தொடர்பு கொண்டனர்.
நேரடியாக பணம் ஏதும் எடுக்கப்படவில்லை. தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பதாக, வங்கிகளிடமிருந்து தொழிலதிபர்களுக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தன.
இது குறித்து போலீசில் தொழில் அதிபர்கள் மற்றும் பணம் பறிகொடுத்தோர் புகார் அளித்தனர். இந்த புகார்கள் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு பின்னர் கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் பாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இலங்கை தமிழர் சுதானந்தன் (வயது 32) என்பவரை க்யூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரன் மற்றும் செல்லதுரை தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் ஸ்கிம்மர் மற்றும் போலி ஏ.டி.எம்.கார்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
இவர் கொடுத்த தகவலின்
பேரில் மற்ற இலங்கை தமிழர்களான சந்திரமோகன் (வயது 42), பிரகாஷ் (வயது 25), முரளிதரன் (வயது 44) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பிடிப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் அனைவரும் முதலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொழில் அதிபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை பட்டியல் போட்டுள்ளனர். அவர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என்பது குறித்து நோட்டமிட்டு, அதுபோன்ற வணிக நிறுவன பகுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இவர்களே ஆட்களை வேலைக்கு அமர்ந்தி, அவர்களிடம் தரப்பட்ட ஸ்கிம்மர் இயந்திரம் மூலம் தொழிலதிபர்களின் ஏ.டி.எம்.கார்டுகளின் ரகசிய எண்களை தெரிந்து கொண்டு, அதனடிப்படையில் 300 போலி ஏ.டி.எம்.கார்டுகளை தயாரித்துள்ளனர்.
இந்த ஏ.டி.எம். கார்டுகள் மூலம் அவர்கள் நேரடியாக பணம் எடுப்பது இல்லை. ஆன் லைன் மூலம் தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி அதை இரண்டாம் தர விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
அவர்கள் 100 கோடிக்கு மேல் மோசடி செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு தவிர சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
முழுமையான விசாரணைக்கு பிறகு இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment