Wednesday, April 10, 2013

இனப்பிரச்சினை கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதன் ஊடாகவே சாத்தியமாகும்: இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடம் தெரிவிப்பு!

Wednesday, April 10, 2013
இலங்கை::இன்று காலை யாழ். மகேந்திரபுரம் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற குழவினர் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். ​
 
இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதன் ஊடாகவே சாத்தியமாகுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் யாழ்.விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடம் தெரிவிப்பு.

நேற்று யாழ்.விஜயம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

யுத்தத்திற்குப் பிந்திய வடக்கில் சமாதான நல்லெண்ண சூழலை உருவாக்குவதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வடபகுதி அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்து வரும் இந்திய அரசுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பாக யாழ்.அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்திக்கும், யாழில் அமைக்கப்படவிருக்கும் கலாசார நிலையத்திற்கும் இந்திய அரசின் உதவி அளப்பெரியது என்றும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மாணவர்களுக்கான உதவி மற்றும் இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் ரயில்பாதை புனரமைப்புத்திட்டம் உட்பட அனைத்து உதவித் திட்டங்களுக்கும் இந்திய அரசு வழங்கிவரும் உதவிகளுக்கு இத்தூதுக்குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

மேலும் இந்திய கடற்றொழிலாளர்கள் வடபகுதி கடற்பரப்பில் எல்லைதாண்டி நுழைந்து தடைசெய்யப்பட்ட றோலர் படகு மூலம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் தீவகத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகமோசமாகப் பாதிக்கப்படுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து விளக்கப்பட்டது.

மேலும் நெடுந்தீவுப் பிரதேச மக்களின் நலன்கருதி பயணிகள் படகுகள், இரண்டு பஸ்வண்டிகள் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கும் தொகுதிகள், தந்து உதவும்படியும் இந்திய குழுவினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் ஊர்காவற்துறை பிரதேச இணைப்பாளரும், ஊர்காவற்துறை பிரதேச சபைத் தவிசாளருமான ம.ஜெயகாந்தன், ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச இணைப்பாளரும், நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளருமான தானியேல் றெக்சியன் (ரஜீவ்) ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் விசேட பேச்சுவார்த்தை நடாத்தினர். 

No comments:

Post a Comment