Tuesday, April 9, 2013

தி.மு.க., உட்கட்சித் தேர்தல்: : ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் போட்டா போட்டி!

Tuesday, April 09, 2013
சென்னை::தி.மு.க., வின், 14வது பொதுத்தேர்தல் ஒட்டி, இம்மாதம், 15ம்தேதி முதல், 30ம்தேதி வரை, முதல் கட்டமாக, ஐந்து மாவட்டங்களின் வார்டுக்கிளை, வட்டக்கிளை தேர்தல் நடைபெறவுள்ளது. உட்கட்சித் தேர்தலில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தென் மண்டல அமைப்புச்செயலர் அழகிரி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில் போட்டா போட்டி உருவாகியுள்ளது.

தி.மு.க., உட்கட்சித்தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. மாவட்ட வாரியாக உறுப்பினர்கள் அட்டை வழங்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தி.மு.க., வின், 14 வது பொதுத்தேர்தல் ஒட்டி, இம்மாதம், 15ம்தேதி முதல், 30ம்தேதி வரை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
 
ஐந்து மாவட்டங்களிலும் உள்ள, ஊராட்சிகளில் உள்ள, வார்டுக்கிளை மற்றும் வட்டக் கிளைகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை நடத்த, மாவட்ட வாரியாக தலைமை நிலையம் மூலம் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் நியமிக்கப்படுகின்றனர்.
அவர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் ஆணையாளர்களைக் கொண்டு தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் ஏற்படும் பிரச்னைகளை, மாவட்டத் தேர்தல் மேற்பார்வையாளரே விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும். அவரால் தீர்த்து வைக்க முடியாத பிரச்னைகளுக்கு தலைமை நிலையம் பரிசீலித்து முடிவு செய்யும். ஒரே வார்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் முடிவுகள் தலைமை நிலையத்திற்கு வந்தால், அவர் வார்டு, வட்ட கிளைத் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு, தலைமை நிலைய தேர்தலுக்கு பின் முடிவெடுக்கப்படும் என, தி.மு.க., தலைமை நிலையம் அறிவித்துள்ளது.
வார்டுக்கிளை, வட்டக்கிளை அளவில் நடக்கும் தேர்தலில், ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில் போட்டா போட்டி உருவாகியுள்ளது. யார் கை ஓங்கும் என்பது போக, போகத் தெரிய வரும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

ஸ்டாலின், அழகிரி இணைந்து செயல்பட வேண்டும்: கருணாநிதி சார்பில் அழகிரியிடம் கனிமொழி தூது?
 
மத்திய அமைச்சர் பதவி இழப்பு, தி.மு.க., செயற்குழு கூட்டம் புறக்கணிப்பு, தன் ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கியுள்ள, தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரியை, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி நேற்று முன்தினம், மதுரையில் சந்தித்து பேசியது, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
அதிருப்தி :
லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே, அண்ணன், தம்பி இருவரும், இணைந்து செயல்பட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளை, அழகிரியிடம், கனிமொழி தெரிவித்துள்ளார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகியது தொடர்பாக, தன்னிடம் எந்த ஒரு ஆலோசனையும், கட்சி மேலிடம் நடத்த வில்லை என்ற அதிருப்தி அழகிரிக்கு நீடித்து வருகிறது. இதனால் அவர், தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில், பங்கேற்காமல் புறக்கணித்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரையில் அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
புறக்கணிப்பு:
சமீபத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் மதுரையில் நடந்தது. அந்தக் கூட்டம் நடத்துவது தொடர்பாக,
 
அழகிரியிடம், ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தவில்லை. போஸ்டர்களில் அழகிரி பெயரை குறிப்பிடவில்லை. இதனால் அக்கூட்டத்தை, அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
 
சிறப்பான வரவேற்பு:
இது தொடர்பாக, அழகிரி ஆதரவாளர்கள், 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகியின் திருமண நிகழ்ச்சிக்காக, மதுரை சென்ற கனிமொழிக்கு, அழகிரி ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அழகிரியை, அவரது வீட்டில், ஒரு மணி நேரம் கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது அழகிரியின் மனைவி காந்திஉடனிருந்தார்.
நலம் விசாரிப்பு:

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:அழகிரியின் உடல் நலத்தை கனிமொழி விசாரித்தார். பின், குடும்ப விஷயங்கள் குறித்தும், இருவரும் பேசினர். அதை தொடர்ந்து, உட்கட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்சியில், கோஷ்டி கோஷ்டியாக பிரிந்து செயல்பட்டால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட்டால், கட்சிக்கு பலம் அதிகரிக்கும். அவர்களின் ஒற்றுமை,
லோக்சபா தேர்தல் வெற்றிக்கும் வழிவகுக்கும் என, அழகிரியிடம், கனிமொழி கூறியுள்ளார்.
 
ஒற்றுமை:
தி.மு.க., வினர் உற்சாகம் அடையும் வகையில், கட்சிக்குள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என, கருணாநிதி விடுத்த வேண்டுகோளை, அழகிரியிடம், கனிமொழி தெரிவித்துள்ளார்.
 
ஒதுக்கி விட வேண்டும்:
அதற்கு அழகிரி, "தென் மண்டல அமைப்புச் செயலர் என்ற முறையில், நானும் சில நடவடிக்கைகளை எடுத்தால் கட்சியின் நலன் பாதிக்கும். அமைப்புச் செயலர்என்ற முறையில், எனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் கூட்டம் நடத்துகின்றனர். என் ஆதரவாளர்களுக்கு, இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். அந்த நோட்டீசுக்கு சம்பந்தப்பட்டவர்களும் விளக்கம் எழுதி அனுப்பி விட்டனர். இத்துடன் அப்பிரச்னையை ஒதுக்கி விட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.இம்மாதம், 13ம் தேதி இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்க, விருதுநகருக்கு, ஸ்டாலின் செல்கிறார். மதுரைக்கு, ஸ்டாலின் செல்லும் போது, அழகிரி வீட்டிற்கு சென்று, அவரது உடல் நலத்தை விசாரிப்பார். கருணாநிதியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், ஸ்டாலினும், அழகிரியும், ஒற்றுமையாக செயல்படுவது குறித்து அவர்கள் இருவரும், பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment