Saturday, April 6, 2013

தூதரகத்தை காலி செய்ய வேண்டாம் : ரஷ்யாவுக்கு வட கொரியா கோரிக்கை!

Saturday,April 06,2013
மாஸ்கோ::தங்கள் நாட்டில் அமைதி நிலவுவதால், தூதரகத்தை காலி செய்யும் முயற்சியை மறு பரிசீலனை செய்யும் படி, ரஷ்யாவிடம் வடகொரியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் விதிமுறைகளை மீறி, வட கொரியா நீண்ட தூர ஏவுகணைகளையும், அணு குண்டு சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதனால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை கடுமையாக்கியுள்ளது.

இதற்கிடையே, நீண்ட தூர ஏவுகணைகளை அமெரிக்கா மற்றும் அண்டை நாடான தென் கொரியாவை தாக்கும் நோக்கத்தில் நிலை நிறுத்தி வருகிறது வட கொரியா. எல்லை பகுதியில் உள்ள கூட்டு தொழிற்பேட்டையை மூடி விட்டதால், தென் கொரிய தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளால், கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

நிலைமை சமாளிக்க, தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க போர் விமானங்களும், கடற்படை கப்பலும் கொரிய எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடகொரியாவின், பியொங்யாங் நகரில் உள்ள தூதரகத்தில் உள்ள ஊழியர்களை தங்கள் நாட்டுக்கு திரும்பும் படி, ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

தூதரக ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து வடகொரிய வெளியுறவு அதிகாரி குறிப்பிடுகையில், ""எங்கள் நாட்டுக்கு எதிரான செய்திகளை, அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் பரப்பி வருகிறது உண்மையில் வட கொரியாவில் அமைதி நிலவுகிறது, எனவே, தூதரகத்தை காலி செய்யும் நடவடிக்கையை ரஷ்ய மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment