Saturday, April 20, 2013

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று நடுக்கடலில் பலியாகும் அகதிகள்: ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு வேதனை!

Saturday, April 20, 2013
மதுரை::இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று, நடுக்கடலில் படகு பழுதாகி, டீசல் இன்றி, தத்தளித்து இறந்த அகதிகளின் எண்ணிக்கை 550'' என, கடலோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.
நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 3000 கி.மீ.,க்கு அப்பால் கிறிஸ்துமஸ் தீவு உள்ளது. இதை தாண்டி, ஆஸ்திரேலியா உள்ளது. இந்நாட்டிற்கு சென்றால், வசதியாக வாழலாம் எனக்கருதி, தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள், கள்ளப்படகு மூலம் அந்நாட்டிற்கு செல்ல முயன்று, நடுவழியில் தத்தளிக்கின்றனர். இதில், சிலர் இறக்கின்றனர்; சிலர் மீட்கப்படுகின்றனர். இதுபோன்று இனி நடக்காமல், முதன்முறையாக நேற்று காலை, மதுரை ஆனையூர் முகாமில் உள்ள அகதிகளை கடலோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சந்தித்தார்.

அவர் பேசியதாவது: சிலர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போனால் பாதுகாப்பு கிடைக்கும்; உதவித்தொகை கிடைக்கும்; வாழ்க்கை நல்லா இருக்கும் எனக்கருதி, குடும்பத்துடன் ரூ.3 லட்சம் வரை கொடுத்து, கள்ளப்படகில் செல்கின்றனர். வேளாங்கண்ணியில் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் மொட்டை போட்டு, படகில் அழைத்துச் செல்கின்றனர். பணத்துக்காக அழைத்துச் செல்லும் நபர்கள், அந்நாடுகளுக்கு நிச்சயம் அழைத்துச் செல்ல முடியாது. இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று, நடுக்கடலில் படகு பழுதாகி, டீசல் இல்லாமல் தத்தளித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 550. ஏப்.,4ல், சிறிய படகில் 22 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட 125 பேர், பயணித்து, நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களின் ஜெயபிரகாஷ் என்பவர் கொடுத்த தகவலின்படி, விமானம் மூலம் மீட்டோம். கடந்த செப்.,7ல், இதேபோல் தத்தளித்த 64 பேரையும் மீட்டோம். உங்கள் பிள்ளைகள் நன்றாக படித்தால், முறையாக வெளிநாடு செல்ல முடியும்; பெற்றோரையும் அழைத்துச் செல்ல முடியும். இல்லாதபட்சத்தில், உங்கள் பணம்தான் வீணாகும், என்றார். பின், நிருபர்களிடம் கூறுகையில், "
இரண்டு ஆண்டுகளில், இதுபோன்று 19 சம்பவங்களை தடுத்து, இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தோம். ஏஜென்ட்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம். கள்ளப்படகில் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார். மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகையில், ""மதுரையில் கடந்தாண்டு 39 பேரும், இந்தாண்டு 12 பேரும் கள்ளப்படகில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றனர். அவர்களை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

குடியுரிமைக்காக ஓடுகிறார்கள்!
 
நமது நிருபரிடம் அகதி தயாநிதி கூறியதாவது: நாங்கள் 1990ல், மதுரை வந்தோம். இதுவரை எங்களை அகதிகளாகவே பார்க்கின்றனர். குடியுரிமை வழங்கவில்லை. இதனால், டிரைவிங் லைசென்ஸ் தர யோசிக்கிறார்கள். டூவீலர்கூட வாங்க முடிவதில்லை. இதுவே, ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்றால், 5 ஆண்டுகளில் குடியுரிமை தந்துவிடுகின்றனர். ஏற்கனவே எங்கள் சொந்தங்கள் அந்நாட்டிற்கு சென்று வளமுடன் வாழ்வதை பார்த்துதான், இங்கே இருந்து செல்ல முயல்கின்றனர். அகதி என்ற முத்திரை குத்தப்படாமல், மத்திய அரசு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment