Tuesday, April 9, 2013

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பலை மீண்டும் இயக்க நடவடிக்கை : வ.உ.சி., துறைமுக தலைவர் நடராஜன் தகவல்!

Tuesday, April 09, 2013
தூத்துக்குடி::நிறுத்தப்பட்டுள்ள, தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து, இந்த நிதியாண்டு இறுதிக்குள்ளாக, மீண்டும் துவங்கப்படுமென'' தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக தலைவர் நடராஜன் தெரிவித்தார்.

இத்துறைமுகத்தின், கடந்த நிதியாண்டின்(2012-2013) செயல்பாடுகள் குறித்து, நேற்று, அவர் கூறியதாவது:
கடந்த நிதியாண்டில், இத்துறைமுகம், 282.60 லட்சம் டன், சரக்குகளை கையாண்டுள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டில் கையாளப்பட்ட, 281.05 லட்சம் டன் சரக்குகளைவிட, 0.55 சதவீதம் கூடுதலாகும். 4,75,599 டி.இ.யூ., சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. 198.54 லட்சம் டன் சரக்குகள் இறக்குமதியும், 84.06 லட்சம் டன் சரக்குகள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. 1294 சரக்கு கப்பல்கள் கையாளப்பட்டன. கடந்த நிதியாண்டில், துறைமுகத்தின் நிகர லாபம், ரூ.84.91 கோடியாகும்.
சரக்கு கையாள்வதில், இத்துறை
முகம், பெரிய துறைமுகங்களின் வரிசையில், ஆறாவது இடத்திலுள்ளது. இதற்கு, முந்தைய நிதியாண்டில், மூன்றாமிடத்தில் இருந்தது. உலக பொருளாதார மந்த நிலையே இதற்கு காரணம். துறைமுகத்தின் தற்போதையை, சரக்கு கொள்ளளவான, 33.34 மில்லியன் டன்களிலிருந்து, மேலும் அதிகரிப்பதற்கு, கடந்த நிதியாண்டில், பொது, தனியார் கூட்டமைப்பின்மூலம், 8வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் உள்ளிட்ட நான்கு திட்டப்பணிகள் வழங்கப்பட்டன. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ரூ.7,500 கோடியிலான வெளித்துறைமுக விரிவாக்கத்தில், ஒன்பது கப்பல்தளங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம், துறைமுக, சரக்கு கையாளும் திறன், மேலும், 42 மில்லியன் டன் அதிகரிக்கும். இத்திட்டம், 2015ல் துவங்கி, 2019ல், முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில், 300 லட்சம் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பயணிகள் கப்பல்:தூத்துக்குடி - கொழும்பு இடையே, 1,000 பேர் பயணிக்கக்கூடிய வகையில் இயக்கப்பட்ட, கப்பல், சிலகாரணங்களினால் நிறுத்தப்பட்டது. அதனை, மீண்டும் இயக்க, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாதான், மறு டெண்டர் விடவேண்டும். அதற்காக, நாங்கள், அந்நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளோம். இம்முறை, பெரிய அளவில் இல்லாமல், பொருளாதார ரீதியாக சாத்தியமான, 150 முதல் 200 பேர் வரை, பயணிக்கக்கூடிய வகையில், சிறிய வகை கப்பல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான, அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு, இந்த நிதியாண்டு இறுதிக்குள்ளாக, அக்கப்பல் போக்குவரத்தை, மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment