Tuesday, April 9, 2013

இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது!

Tuesday, April 09, 2013
இலங்கை::இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.
 
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளையேனும் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை உரிய முறையில் ஏற்படுத்தாமை போன்ற காரணிகளினால் மீளவும் முரண்பாடுகள் வெடித்த சந்தர்ப்பங்கள் பல வரலாற்றில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இந்த நடவடிக்கை மிகவும் கடினமானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கையானது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நீண்ட காலமாக உறவுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த முக்கிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரம் மிகவும் அவசியமானது எனவும், ஜனநாயக நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையான அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment