Thursday, April 25, 2013

அ.தி.மு.க.,வுடன் ஒட்ட வைக்கும் பண்ருட்டி முயற்சி பலன் தருமா?,

Thursday, April 25, 2013
சென்னை::அ.தி.மு.க.,வுக்கு எதிரான தே.மு.தி.க.,வின் அணுகுமுறையில், மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சட்டசபையிலும், வெளியிலும் கடும் எதிர்ப்பைக் கைவிட்டு, அனுசரணையான போக்கை, தே.மு.தி.க., மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம், அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க.,வை மீண்டும், "ஒட்ட வைக்கும்' முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு, அடித்தளம் அமைக்கும் பணிகளை, கட்சியின் மூத்த தலைவர், பண்ருட்டி ராமசந்திரன் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

தேனிலவு:
 
கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணி உருவானது. இதற்கு, தமிழகத்தை சேர்ந்த அரசியல் நோக்கர்கள் பலரும் அச்சாரம் போட்டனர். இக்கூட்டணி, எதிர்பார்த்ததை விட, கூடுதல் இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், இரு கட்சிகளுக்கு இடையேயான, தேனிலவு சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை.உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடும் என்ற, முதல்வர் ஜெயலலிதாவின் முடிவு, முதல் பிளவை ஏற்படுத்தியது. இதன்பின், சட்டசபையில் நடந்த சம்பவங்கள், தோழமை கட்சியான, தே.மு.தி.க.,வை, எதிரிக் கட்சிபோல் ஆக்கி விட்டது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், "சஸ்பெண்ட்' செய்த விவகாரம், பெரும் விரோதத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து, அரசின் மீது, அக்கட்சியின் தலைவர்கள் முன்வைத்த விமர்சனங்கள், அவதூறு வழக்குகளில் சென்று நிறுத்தியது.தே.மு.தி.க.,வின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து பேர், அ.தி.மு.க., பக்கம் சாய்ந்தனர். இதனால், சட்டசபையில் ஏற்பட்ட தகராறில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஆறு மாதத்துக்கு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தோழமை ஏற்படுத்த...:
 
தே.மு.தி.க.,வின் செயல்பாடுகளை முடக்கவும், எதிர்வரும் ராஜ்யசபா உள்ளிட்ட தேர்தல்களில், நெருக்கடி ஏற்படுத்தவும், அ.தி.மு.க., முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், தி.மு.க., பக்கம் தே.மு.தி.க., செல்வதைத் தடுக்கவும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே மீண்டும் தோழமையை ஏற்படுத்தவும், அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான, பண்ருட்டி ராமசந்திரன் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, அக்கட்சிக்குள்ளேயே கருத்து எழுந்துள்ளது.சட்டசபை கூட்டத் தொடரில், இது எதிரொலிக்கவும் செய்கிறது. பிரதான எதிர்க்கட்சியான, தே.மு.தி.க.,வை, சட்டசபை பொது விவாதங்களைத் துவக்கி வைத்துப் பேச, அனுமதிக்க முடியாது என, சபாநாயகர், தனபால் நடவடிக்கை எடுத்தார். இப்பிரச்னையில், பண்ருட்டி ராமசந்திரன் தலையிட்டு, "பிரதான எதிர்க்கட்சியை, முதலில் பேச அனுமதிக்க வேண்டும். அம்முடிவு எடுக்கும் வரை, சட்டசபையை புறக்கணிப்போம்' என, அறிவித்தார்.

தனிந்த கோபம்:
 
முதல்வர் ஜெயலலிதாவின் தலையீட்டுக்குப் பின், பொது விவாதங்களில் பேச, தே.மு.தி.க.,வுக்கு, சபாநாயகர் அனுமதி அளித்தார். பொது விவாதங்களில், பேசும், தே.மு.தி.க.,வினரை, ஆளும்கட்சிக்கு கோபம் ஏற்படுத்தாமல் பேசுமாறு, பண்ருட்டி, ஆலோசனை வழங்கி வருகிறார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை விவாதத்தில், இது வெளிப்பட்டது. கட்சியின் சேலம் எம்.எல்.ஏ., மோகன்ராஜை, ஆவேசப்படாமல் பேசி முடிக்குமாறு செய்தார்.காவல்துறை, முதல்வர் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் இருப்பதால், அத்துறை மீதான மானிய கோரிக்கையில், பண்ருட்டி ராமசந்திரனே பேசினார். அப்போது, "ஊடகங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது, தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை, அரசு வாபஸ் பெற வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார். இதற்கு, முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து, சாதகமான பதில் வராவிட்டாலும், இரு கட்சிகளையும் தோழமைப்படுத்த, பண்ருட்டி எடுத்த முயற்சியாகவே, இது கருதப்படுகிறது.பண்ருட்டியின் முயற்சிக்கு, தே.மு.தி.க.,வில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், ஒரு தரப்பினர், கட்சி நலனுக்காக, பண்ருட்டி எடுக்கும் முயற்சி சரியானதே என கூறுகின்றனர். பண்ருட்டியின் "ஒட்ட வைக்கும்' முயற்சி பலன் தருமா, அ.தி.மு.க.,- தே.மு.தி.க., தோழமை மீண்டும் மலருமா என்பது, வரும் காலத்தில் தெரியும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment