Sunday, April 21, 2013

பாஸ்டன் குண்டுவெடிப்பு எதிரொலி ஒருவர் கைது; சகோதரன் சுட்டுக் கொலை போலி என்கவுன்டர் என்று தந்தை கதறல்!

Sunday,April,21,2013
பாஸ்டன்::பாஸ்டன் குண்டுவெடிப்பில் செசன்ய சகோதரர்கள் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்தது. அவர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை கைது செய்தனர். ஆனால், குண்டுவெடிப்புக்கும் தனது மகன்களுக்கும் தொடர்பில்லை என்று தந்தை கதறுகிறார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை மராத்தான் ஓட்டம் நடந்தது. எல்லை கோட்டுக்கு அருகே 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பலியாயினர். 170க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சதியில் வாலிபர்கள் 2 பேர் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பாஸ்டன் நகர போலீசார் தேடி வந்தனர். அப்போது மாசாசூசெட்ஸ் நகரில் பதுங்கி இருப்பது தெரிந்து போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது அவர்கள் காரில் தப்பியோடினர்.

அவர்களை துரத்தி சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். அவர் பெயர் தாமர்லான் சர்னேவ் (26). செசன்யாவை சேர்ந்தவர். குண்டு காயங்களுடன் இவரது சகோதரர் சோகர் சர்னேவ் (19) தப்பியோடினார். அவரை தொடர்ந்து தேடினர். அப்போது படகில் பதுங்கியிருந்த போது சோகரையும் போலீசார் கைது செய்தனர். குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் தாமர்லான், சோகர் சர்னேவின் குடும்பம் 10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இவரது தந்தை அன்சார் சர்னேவ் ஓராண்டுக்கு முன்புதான் ரஷ்யாவுக்கு சென்றார். தனது ஒரு மகன் சுட்டுக்கொல்லப்பட்டதும், மற்றொரு மகன் கைது செய்யப்பட்டதையும் அறிந்து அன்சார் கதறினார். இதுகுறித்து போனில் அளித்த பேட்டியில் அன்சார் கூறியதாவது:

அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும் என்று தாமர்லான் காத்திருந்தான். அவனுக்கும் குண்டுவெடிப்புக்கும் சத்தியமாக தொடர்பு இருக்காது. அவனை அநியாயமாக சுட்டுக் கொன்று விட்டனர். குண்டுவெடிப்பில் அவனுக்கு தொடர்பு இல்லை என்பது அந்த கடவுளுக்கும், குண்டுவெடிப்பு நடத்தியவர்களுக்கும்தான் தெரியும். எனது மகன்கள் நல்ல குழந்தைகள்.

சோகர் அமெரிக்க கிரீன் கார்டு வைத்துள்ளான். ஆனால், தனது தோழியை ஏதோ பிரச்னைக்காக அடித்து விட்டான். அதனால் அவனை போலீசார் அரை மணி நேரம் காவலில் வைத்து விசாரித்தனர். அந்த பிரச்னை ஒன்றுதான் அவன் மீது உள்ளது. தவிர அவர்கள் இருவருமே நல்லவர்கள். போலி என்கவுன்டர் மூலம் ஒருவனை சுட்டு கொன்று விட்டனர்.இவ்வாறு அன்சார் கூறினார்.ஆனால், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்று கடந்த 2011ம் ஆண்டே புலனாய்வு ஏஜென்சி எப்பிஐ அதிகாரிகள், தாமர்லானிடம் விசாரணை நடத்தினர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment