Friday, April 5, 2013

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு வாக்கு சேகரிக்க பயன்படும் மிக மலினமான தமிழீழம் அமைவது!!


Friday, April 05, 2013
இலங்கை::தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு வாக்கு சேகரிக்க பயன்படும் மிக மலினமான தமிழீழம் அமைவது!!
 
தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு வாக்கு சேகரிக்க பயன்படும் மிக மலினமான கச்சா பொருளாக மாறி விட்ட இலங்கை தமிழர் பிரச்சினை தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்” “இலங்கையை நட்புநாடு இல்லை என்று கூற வேண்டும்,இலங்கை மீது பொருளாதார தடை கொண்டுவரப்பட வேண்டும்,என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருகின்றது.
 
தமிழ் நாட்டில் உள்ள அரசியல் வாதிகளுக்கு வாக்கு சேகரிக்க முதலிடும் மிக மலினமான கச்சா பொருளாக இலங்கை தமிழர் பிரச்சனை மாறி உள்ளதன் வெளிப்பாடே இதுவாகும்.
 
தமிழீழத்துக்காக ஒரு பரம்பரையையே நாங்கள் பலிகொடுத்து முடித்திருக்கின்றோம். ஆக குறைந்தது இந்த பொல்லாத தமிழீழத்துக்காக வடக்கு. கிழக்கில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களும் வீட்டுக்கு ஒருவரை இழந்திருக்கின்றோம். அந்த தமிழீழத்துக்கான யுத்தம் இன்னும் ஒரு பத்து வருடம் நீடித்திருந்தால் இலங்கை தமிழர்கள் என்னும் ஒரு இனமே எஞ்சியிருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி..இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழீழமா?
 
அது பற்றி இலங்கை வாழ் தமிழர்கள் மீண்டும் ஒரு முறை எண்ணி பார்க்க தயாரா? எந்த ராணுவத்தை எமது எதிரி என்று சுமார் முப்பது வருடகாலம் போராடினோமோ அந்த இராணுவத்திலேயே சேர்ந்து விடுகின்றோம் என்று நூற்று கணக்கான முன்னாள் போராளிகள் இலங்கை இராணுவமாக மாறி வருகின்றார்கள்.அந்த அளவிற்கு தமிழீழ போராட்டம் ஒரு சாண் வயிற்றுக்கான போராட்டமாக உருக்குலைந்து கூனி குறுகி நிற்கின்றது.. இலங்கை தமிழர்களின் உண்மையான அவலநிலை இவ்வாறிருக்க தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் தமக்கான வாக்கு சேகரிப்பு போட்டியில் எம்மை பகடைகாய்களாக பயன்படுத்துவது எரிகின்ற நெருப்பில் எண்ணையூற்றும் ஈனசெயலுக்கு ஒப்பானதாகும்.
 
தமிழ் நாட்டில் உணர்வுகளை தூண்டிவிட்டு மத்திய அரசில் இருக்கும் தி.மு.காவை அதிலிருந்து வெளியேற்றும் ஜெயலலிதாவின் திட்டம் நிறைவேறி இருக்கின்றது.இருந்தாலும் விரைவில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் “இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசாங்க அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்தது தி.மு.க. ஆனால் ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக எதனை தூக்கி எறிந்தார்”என்று கருணாநிதி கேட்கபோகும் கேள்விகளை எதிர்கொள்ளவே இந்த தீர்மான நாடகம் அரங்கேற்ற பட்டிருக்கின்றது.மேற்படி தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் “தமிழகத்தின் தீர்மானத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைப்பாடாக கருதமுடியாது நாட்டில் எத்தனையோ சட்டசபைகள் உள்ளன. தமிழக சட்டசபை சொல்வதையெல்லாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
 
இதனூடாக சட்ட வலுவற்ற உப்பு சப்பற்ற இந்த தீர்மானம் வெறும் கண் துடைப்புக்காக ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட ஒரு நாடகம் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.இல்லாவிட்டால் இலங்கை தமிழர்களின் தனி நாட்டு கோரிக்கை பற்றி இவ்வளவு அக்கறை கொள்ளும் இந்த ஜெயலலிதா ஏன் தமது அ..தி.மு.க கொடியில் அட்டகாசமாக காட்சிதரும் அறிஞர் அண்ணாவின் “திராவிடநாடு திராவிடருக்கே” என்னும் தனி நாட்டு கனவை நிறைவேற்ற சொல்லி சட்ட சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியாது? அது சாத்தியமானால் தமிழ் நாடு மட்டுமல்ல கேரளமும் தெலுங்கும் தன்தாய் நாடாம் கன்னடமும் இணைத்து பெருந்திராவிட நாட்டுக்கு அவரே பிரதமரும் ஆகலாம்.
 
அண்ணாவின் அந்த அரிய கனவிற்கு பொது வாக்கெடுப்பு கோரி சட்டசபையில் அவர் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.அப்படி அவர் செய்தால் ஒரு நாட்டின் இறைமை என்பதன் அர்த்தத்தை மத்திய அரசாங்கம் அவருக்கு உணர்த்தும். அதை விடுத்து இலங்கையின் இறைமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஜெயலலிதாவிற்கு எந்த அருகதையும் கிடையாது.அப்படி என்றால் இந்திய சுதந்திரத்தின் போது காஷ்மீர் மாநாட்டு கட்சி தலைவர் ஷேக் அப்துல்லாவை சிறைக்கு சென்று சந்தித்த நேரு காஷ்மீரை தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள சம்மதம் வாங்கியபோது காஷ்மீரை தனி நாடாக அமைப்பது தொடர்பாக ஒரு வருடத்துக்குள் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சர்வ தேச நடுநிலையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தீர்மானத்தினை இலங்கை பாராளுமன்றம் நிறைவேற்றினால் இந்தியா அதை ஏற்று கொள்ளுமா? என்கின்ற கேள்விகளெல்லாம் உண்டு.
 
இலங்கையென்பது ஒரு குட்டி தீவாக இருந்த போதும் இந்தியாவின் பலநூறு படையெடுப்புகளும் தாண்டி மூவாயிரம் வருடங்களுக்கும் மேலாக தனது இறைமையை காத்துவரும் வல்லமை படைத்த தேசமாகும் என்பதை ஜெயலலிதா மட்டுமல்ல தமிழ் நாட்டின் அரசியல் கற்றுக்குட்டிகள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் .அதில் வாழும் வரலாற்று பெருமை கொண்டவர்கள் என்கின்ற சுய கெளரவம் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றி எம் எல்லோரையும் ஆட்கொள்ளவேண்டும்.ஜெயலலிதாவின் இந்த ஸ்ட்ரன்ட் அரசியல் நாடகத்தை இலங்கையின் ஒருமைப்பாட்டை நேசிக்கின்ற இறைமையை மதிக்கின்ற ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் கண்டனம் செய்ய வேண்டும்.
 
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்லி எமது மக்களின் அவலங்களை அரசியல் வியாபாரமாக்கும் தமிழக தலைவர்களை நம்பி நம்மோடு இணைந்து வாழும் சிங்கள மக்களை நாம் உதறித்தள்ள முடியாது என்பதை இத்தனை படிப்பினைகளுக்கும் பின்னர் நாம் புரிந்துகொள்ளாவிட்டால் வரலாறு நம்மை வாழவைக்காது. .யுத்தம் முடிந்த பின்னர் சீரடைந்து வரும் சமூகநல்லிணக்கத்திற்கும் இன நல்லுறவுக்கும் ஊறு விளைவிற்கும் தமிழக அரசியல் வாதிகளை நாம் கண்டனம் செய்ய முன்வர வேண்டும்
தமிழ் நாட்டின் மேற்படி தீர்மானம் குறித்து மட்டக்களப்பில் வைத்து கருத்து தெரிவித்துள்ள எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க “இலங்கையில் நீடித்து நிலைக்கக் கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்துவிட்டது”என தெரிவித்துள்ளார்.இதன் ஊடாக இலங்கை தமிழர்கள் இனி இந்தியாவையோ அதன் அரசியல் வாதிகளையோ நம்பி பிரயோசனமில்லை என்பது வெளிப்படுகின்றது.
 
இந்த செய்தி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கவனம் கொள்ள வேண்டும்.நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்றில்லா விடினும் பிரபாகரனுக்கு பின்னர் தமிழ் மக்களின் இரண்டாவது தேசிய தலைவராக கூட்டமைப்பினர் தத்தெடுத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்காதான் இனி தமிழர்கள் இந்தியாவையோ அதன் அரசியல் வாதிகளையோ நம்பி பிரயோசனமில்லை என கூறியுள்ளார்.இந்த ரணிலின் ஆலோசனையின் பெயரிலேயே நமது சம்பந்தன் யாழ்ப்பாணத்தில்வைத்து இலங்கைதேசியகொடியை ஏந்திதனிநாட்டு கோரிக்கையை கைவிடும் பிரகடனத்தை செய்தார் என்பது முக்கியமான வரலாற்றுநிகழ்வு ஆகும்.
 
எனவே பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் பச்சோந்தித்தனத்தை விட்டு கூட்டமைப்பினர் இந்தியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இலங்கைத்தமிழர் சார்பில் தெளிவாக ஒன்றை கூறவேண்டும் “இலங்கையில் கடந்த கால நிகழ்வுகளுக்கும். தமிழர்களின் துன்பங்களுக்கும்  புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரன்தான் காரணம். இலங்கை தமிழ் தலைவர்களான அமிர்தலிங்கம். நீலன் திருச்செல்வம். சீறீ சபாரத்தினம். பத்மநாபா போன்ற தலைவர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் முள்ளிவாய்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சாவுக்கு  புலிகள்தான் காரணம்.அவர்களின் தாய்நாட்டு கோரிக்கை கடந்த நுற்றாண்டின் காலாவதியாக போன சிந்தனை அதை நாங்களே கைவிட்டு விட்டோம்.அதனை மீண்டும் புதுப்பித்து எமதுமக்களுக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு வழிகாட்டவேண்டாம் “என்பதே அதுவாகும்.
 
மட்டகளப்பிலிருந்து-AK

No comments:

Post a Comment