Monday, April 22, 2013

இன்று வடமாகாண முஸ்லிம்கள் அகதிகள் என்று அழைக்கப்படுவதற்கு காரணமானவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம், அடைக்கல நாதன், வினோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் தான்: இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக்!


Monday, April 22, 2013
இலங்கை::நேர் காணல்-அபூ அஸ்ஜத்: 
வடக்கில் ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.அவர்கள் வந்தேறு குடிகளல்ல, முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் குடியேறவேண்டாம் என்று கூற எவருக்கும் அனுமதியில்லை என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக் வழங்கிய செவ்வியின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்

கேள்வி: 
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றீர்கள்.
பதில்: 
முதலாவது கேள்வியே மிகவும் முக்கியமானது. வடமாகாணம் என்பது 5 மாவட்டங்களை கொண்டது. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார். அவர்கள் வாழ்ந்தமைக்கான கலாசார சான்றிதழ்கள் நிறையவே உள்ளன. குறிப்பாக வன்னி மாவட்டத்தை இங்கு பார்க்கும் போது, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மீள்குடியேற வரும் முஸ்லிம்கள் இன்று பல்வேறுபட்ட தடைகளை குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களால் எதிர் நோக்கிவருகின்றனர்.
முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்கள் இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து நாம் விவாதிக்கவரவில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வாழ்பவர்கள் எமது தமிழ் சகோதரர்கள். அவர்கள் அதே இடத்தில் வாழட்டும், அதேபோல் 20 வருடங்களின் பின்னர் மீள்குடியேறவரும் அதே பிரதேச மக்களும் வாழ்வதற்கு தேவையான காணிகளை பெற்றுக் கொடுங்கள் என அரச அதிபர்களிடத்திலும், பிரதேச செயலளார்களிடத்திலும் கேட்கப்பட்ட போது, அதனை சில அரசியல் விஷமிகள் இன ரீதியாக காணி வழங்கப்படுகின்றது என்று பொய் பிரசாரம் செய்கின்றனர்.
கேள்வி: 
தமிழ் மக்களது காணிகளை முஸ்லிம்கள் பிடிப்பதாகவும், அரச காடுகளை அழிப்பதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனரே, இது உண்மையா ?
பதில்: 
இன்று வடமாகாண முஸ்லிம்கள் அகதிகள் என்று அழைக்கப்படுவதற்கு காரணமானவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம், அடைக்கல நாதன், வினோகதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் தான். என்பது அழிக்கப்பட முடியாத உண்மையாகும். புலிகள் அவர்களது போராட்டத்தை முன்னெடுத்தமை சரியா? பிழையா? என்பது பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம். இருந்தாலும் அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், தற்போதைய நிலையில் வெளியேற்றப்பட்ட அந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்தளவிலான உணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் மனித நேயம்.ஆனால் வன்னியில் வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்றும் அவர்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவி செய்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களுக்கு அவர்கள் தமது ஆதரவை வழங்காமல் இருக்கின்றனர். அதற்கு நான் வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் நன்றி கூறுகின்றேன். தமிழ் மக்களுக்கு சொந்தமான ஒரு அங்குல காணியினையாவது முஸ்லிம்கள் பலாத்காரமாக அபகரித்ததற்கு போதுமான ஆதரத்தை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் காண்பிப்பார்கள் என்றால், அடுத்த கணமே எனது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்திலிருந்து இராஜிநாமாச் செய்ய தயாராகவுள்ளேன்.
இவர்கள் சுமத்தும் குற்றச் சாட்டில் உண்மையில்லை, எமது சகோதர தமிழ் மக்கள் இனாமாக ஒரு அங்குல காணியினை மன முவர்ந்து தந்தாலும் நாம் அவற்றை பெறவிரும்பமாட்டோம். ஏனெனில், யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சகோதரர்களும் உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அரச காடுகளை அழிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதனை எமது அமைச்சர் றிசாத் பதியுதீனோ, எமது ஆதரவளார்களோ செய்யவில்லை, அராசங்கத்தின் காணிகள் உரிய முறையில் அடையாளப்படுத்தப்பட்டு, காணி அமைச்சு, வனபரிபாலன திணைக்களத்தின் அதிகாரிகளினால் அடையாளப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில் அவைகள் மக்கள் வாழ்வதற்கு தேவையான அளவு காடழிப்பு செய்யப்படுகின்றது. அன்று இறுதி யுத்தத்தின போது, மெனிக்பார்ம் முகாம் உருவாக்கப்பட்டதும் அப்படித்தான் என்பதை தற்போது பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்று ஏன் அரச காணியின் மீது அக்கறை கொண்டிருந்தால் பேசி இருக்க வேண்டுமே… இது தான் அவர்களின் அரசியல் நாடகம்.
 
கேள்வி: 
 
வெளி மாவட்ட முஸ்லிம்கள் வன்னியில் குடியேற்றப்படுவதாக ஒரு குற்றச் சாட்டு சுமத்தப்படுகின்றதே…
பதில்: 
இந்த குற்றச் சாட்டை சுமத்துபவர்கள் தான் கிளிநொச்சி மாவட்ட தமிழ் மக்களை மன்னார் மாவட்டத்தில் உள்ள சன்னார் பிரதேசத்தில் மீள்குடியேற்றியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் மக்களை குடியேற்றவே, முள்ளியாவலையில் அம்மக்களை வாகனங்களில் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகின்றது. முல்லைத்தீவு முள்ளியாவலை பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள், 1990 ஆம் ஆண்டு 1800 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துள்ளனர், சுமார் 14 கிராமங்களில் முஸ்லிம்கள் இருந்தமைக்கான பதிவுகள் இருக்கின்றன. ஆனால் முள்ளியாவலையில் தமிழ் மக்களது காணிகளை முஸ்லிம்கள் பிடிக்கின்றார்கள் என்று கூறுவது முற்றிலும் பொய்யான கதையாகும். அவ்வாறு தமிழ் சகோதரர்கள் வாழ்ந்தால் அவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமே, கடந்த 30 வருடங்கள் முல்லைத்தீவின் ஆட்சியினை தமிழீழ விடுதலைப் புலிகளே அவர்கள் வசம் வைத்திருந்தார்கள். அப்போது இந்த தமிழ் சகோதரர்களுக்கு தேவையான அளவு காணிக்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்திருக்க முடியும் இன்று தமிழ் மக்களுக்காக பேசும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று அதனை செய்யாத்தன் மர்மம் என்ன ?
அதைவிடுத்து கையலாகாத அரசியல் வாதிகளாக இருந்து கொண்டு தற்போது அங்கு காணியில்லாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கும் எம்மால் காணிகள் பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட பின்பு தமிழ் மக்கள் அதனை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக நாடகமொன்றை அரங்கேற்றி நிற்கின்றனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் வாசகம் தான் வெளிமாவட்ட முஸ்லிம்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று.
வெளி மாவட்ட மக்கள் எமது மண்ணில் பலாத்காரமாக குடியேற்றப்படுவார்கள் என்றால் அதற்கு எதிராக முதலில் போராட்டம் நடத்துபவர்கள் நாங்களாகத்தான இருப்போம், வெளி மாவட்டத்தில் சகல வசதி வாய்ப்புகளுடன் வாழும் முஸ்லிம்களுக்கு என்ன தேவையிருக்கின்றது. இந்த காடுகளுக்குள் அடிப்படை வசதிகள் இன்றி இங்கு வந்து வாழ்வதற்கு, ஆனால் இம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்களுக்கு உரிமை இருக்கின்றது, இந்த மண்ணில் வாழுவதற்கு அதற்கு எவராலும் தடைகளை போட முடியாது. வெளி மாவட்ட ஒரு முஸ்லிம் குடும்பம் ஏனும் இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ளதா என்பதை நிரூபிக்க முடியாமல், பொய்யான கட்டுக்கதைகளை புனைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் கூறுவது அநியாயமாகும்.
கேள்வி: 
அமைச்சர் றிசாத் பதியுதீன் அடாவடி.த்தனமாக நடந்து கொள்கின்றார் என்று நேரடியான குற்றம் சுமத்தப்பட்டுவருகின்றதே, இது குறித்து என்ன சொல்கின்றீர்கள் ?
பதில்: 
ஊடகங்கள் பல தமக்கு சாதமாக இருக்கின்றது என்பதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பார்க்கின்றோம். எனக்கு பழ மொழியொன்று ஞாபகத்துக்கு வருகின்றது. காய்க்கின்ற மரத்துக்கு தான் கல்லடிகளும், பொல்லடிகளும் என்று கூறுவார்கள். அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பவர் எமது கட்சியின் தேசிய தலைவர், அதுவும் இன்றைய அமைச்சரவையில் சிறுபான்மை தமிழ்-முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவர். தமிழ் மக்கள் அகதிகாளக மெனிக் பார்முக்கு வந்த போது, ஓமந்தையில் வைத்து அம்மக்களுக்கு தேவையான அடிப்டை வசதிகளை வழங்கியவர் அதே போல் மெனிக் பார்ம் நலன் புரி முகாமை தமிழ் மக்களின் தற்காலிக வாழ்விடமாக மாற்றியவர், அதே போல் மெனிக்பார்மில் இருந்த 3 இலட்சம் மக்களையும் அன்று மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்தவர். அப்போது கூட சில தரப்புக்கள் இந்த தமிழ் மக்களை மீள்குடியேற்ற விடாமல் தொடர்ந்து தடுக்கும் வேலைகளை சர்வதேசத்தில் இருந்து கொண்டு செய்த போதும், அதனை மீறி இம்மக்களை அவர்களைது சொந்த மண்ணில் மீள்குடியேற்றிய ஒரு சிறந்த தலைவர் என்று கூறினால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட மனித நேயம் கொண்ட ஒருவரை ஏன் இன்று அடாவடித்தனம் செய்யும் ஒருவராக சித்தரித்து காட்டுகின்றார்கள் என்றால், அதனது பின்னணி தான் அடுத்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தங்களால் வரமுடியாது, தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், அவர்களை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்ற அச்சம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளத்தினை பிணியாய் வருத்துகின்றது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தான் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கின்றார். சில பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராக நான் இருக்கின்றேன். எம்மிடத்திலோ, அமைச்சரிடத்திலோ அதிகாரிகளால், மக்களின் தேவை குறித்து சமர்பிக்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் இனப்பாகுபாடுகளின்றி அனுமதி வழங்கியிருக்கின்றோம். எதிர் காலத்திலும் எமது செயற்பாடுகள் அப்படித்தான் அமையும், ஏனெனில் தேவைகளின் அடிப்படையில் தான் நாம் எந்த திட்டத்தையும் பார்கின்றோம், அது தமிழர்களா?, முஸ்லிம்களா?, சிங்களவர்களா? என்ற ஓர் வஞ்சனை பார்வை எங்களிடத்தில் இல்லை. அமைச்சர் றிசாத் பதியுதீன் அடாவடித்தனம் செய்பவராகவும், இலங்கை நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் ஒருவராக இருந்திருந்தால் இந்த மீள்குடியேற்றத்தை எப்போதோ செய்யதிருக்க வேண்டும், அது ஏன் நடை பெறவில்லை. அவர் சிறந்த ஜனநாயக வாதி என்பதால்.
கேள்வி: 
இந்திய வீடமைப்பு திட்டத்தின் தெரிவில் அரசியல் கை காணப்படுகின்றது என்கின்றார்களே?
பதில்: 
அதற்கான பதிலை இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயம் அண்மையில்
உடகங்களுக்கு வழங்கியிருந்தது. குறிப்பாக இந்த வீடமைப்புத்திட்டம், யுத்தம் மற்றும் வறுமை நிலை கொண்டவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு விடயமாகும். 50 ஆயிரம் வீடுகளை இத்திட்டம் கொண்டுள்ளது. இதில் மொத்தம் ஆயிரக்கணக்கான வீடுகள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இதனது தெரிவு விடயங்களில் அரசியல் கலப்படம் இல்லை. ஏனெனில், இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் ஒன்று சேர்ந்து பயனாளிகள் தெரிவில் புள்ளி வழங்கும் நடை முறையினை அமுல்படுத்தி. அதனடிப்படையிலேயே இந்த தெரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பெயர் விபரங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பரிசீலிக்கப்பட்டு பின்னர் அவை உரிய அதிகாரிகளுக்கு நடை முறைப்படுத்த அனுப்பப்படுகின்றன. அப்படியென்றால் எப்படி இந்த வீடமைப்பு திட்டத்தில் அநியாயம் இழைக்கப்படும் தமிழ் மக்களுக்கு.தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி எம்.பிக்கள் அதிலும் அரசியல் செய்கின்றனர்.
கேள்வி: 
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ள உங்களது கட்சி தயாராக இருக்கின்றதா? அண்மையில் உங்களது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏராவூரில் வைத்து அழைப்பும் விடுத்துள்ளரே? இது எந்தளவு சாத்தியமாகும்.?
பதில்: 
இந்த நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்புக்களும் எற்பட வேண்டும் என்பது எமது ஆசையாகும். பாராளுமன்ற உறுப்பினர் அய்யா சம்பந்தன் அவர்கள் கூட முஸ்லிம்கள் விடயத்தில் உருக்கமான உரையொன்றினை அண்மையில் ஆற்றியிருந்தார். எதிர் காலத்தில் தீர்வு ஒன்று வருகின்ற போது. அதில் முஸ்லிம்களுக்கும் சமமான பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கின்றது. அவ்வாறு வழங்கப்படாத, முஸ்லிம்களின் உடன்பாடு இல்லாத எந்த திட்டமும் முழுமை பெறாது, தமிழ் சகோதரர்களுக்கு வழங்கப்படும் தீர்வில் எமது தடைகள் இருக்காது. அதே போல் முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதம், உரிமைகள் மீறப்படக் கூடாது என்பதை நாம் திட்டவட்டமாக கோறுவோம்.
அதன் அடிப்படையில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்பது இந்த தீர்வு திட்டத்திற்கு மிகவும் முக்கியமானது, திறந்த மனதோடு எமது தரப்பு நியாயங்களை தமிழ் தலைவர்களுடன் பேசுவதற்கு தயாராக இருக்கின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் போன்றவர்கள் தமிழ் சமூகத்தின் முக்கிய தலைவர்களாக இருக்கின்றனர். இதன் போது எமது திட்டங்கள் குறித்து கலந்துரையாட முடியும். அதற்காக சந்தர்ப்பம் எற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஒரு அழைப்பாக தான் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அந்த உரையும் அமைந்திருந்தது.

No comments:

Post a Comment