Saturday, April 27, 2013
ராமேசுவரம்::இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 30பேரின் காவல் நீட்டிப்பு செய்து மே 6-ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி 656 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. கச்சத்தீவு தனுஷ்கோடி பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். அப்போது, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் சங்க தலைவர் தேவதாஸ், மார்ட்டின், ஆரோக்கிய குரூஸ், புவனேந்திரன், அந்தோனிஅடிமை ஆகியோருக்கு சொந்தமான 5விசைப்படகுகளை 30மீனவர்களுடன் சிறைபிடித்து சென்றனர்.
இந்த படகில், ராமேசுவரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சேசுராஜா, ஆறுமுகம், தினேஷ், செல்வம், சென்ரின், சந்தியா, பாக்சன், வில்டன், சுதாகர், முருகவேல், பரமேஸ்வரன், நீலகண்டன், முனியசாமி, ராதாகிருஷ்ணன், நிர்மல்பாபு, தங்கராசு, குமரவேல், தனபால், வடிவேல், முனியசாமி, தங்கதுரை, சந்திரசேகர், அயன்ராசு, பிரேம்குமார், மாரீஸ்வரன், கசவம், ஜான்சன், சந்திரன், ஜோன், அந்தோனிபிச்சை ஆகிய 30மீனவர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறைக்காவல் முடிந்து அவர்கள் அனைவரும் நேற்று மீண்டும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி அந்தோனிபிள்ளைசுவட்சம் மீனவர்கள் அனைவரையும்மே 6-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்கும், அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மீனவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை மேலும், காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடும் வேதனையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். மத்திய அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், இதைக்கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment