Sunday, March 3, 2013

தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சிக்காக நான் ராஜபக்சவை வலியுறுத்தி வருகிறேன் - ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி!

Sunday, March 03, 2013
திருச்சி::ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தர தன்னால்தான் முடியும் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்திக்கும். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்தக் கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதை ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள். மத்தியில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனிக்கு தொடர்பில்லை; முழுதும் சோனியாதான் காரணம். அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்.

முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தின் முன் ஆஜராகி வாதாடுவேன் என்று சொல்வதால் எந்த பலனும் இல்லை. ஜேபிசி முன் வாதாடுவதற்கு பதில், அவர் விதி எண் 313ன் கீழ் நீதிமன்றத்தில் அவர் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லலாம். அவற்றை ஜேபிசி முன் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஜேபிசியில் காங்கிரஸாரே அதிகம் உள்ளனர். எனவே அவர் கூறும் எதுவும் எடுபடாது.

நான் ராஜபக்சவை சந்தித்து வந்தேன். தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சிக்காக நான் ராஜபக்சவை வலியுறுத்தி வருகிறேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது. ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் நான் வாங்கித் தருவேன். இவ்வாறு கூறினார் சுப்பிரமணியம் சுவாமி.

No comments:

Post a Comment