Friday, March 29, 2013
பிரேசிலியா:;மருத்துவமனை பெட் களை காலி செய்வதற்காக 300 நோயாளிகளை பெண் டாக்டர் ஒருவர் கொலை செய்த பயங்கரம் பிரேசிலில் நடந்துள்ளது. குலை நடுங்க வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம்:பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் கிரிடிபா என்ற நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் வர்ஜினியா சோரஸ் டிசோசா (56) என்ற பெண் டாக்டர் தலைமையில் மருத்துவ குழு இயங்கி வந்தது. இந்த குழுவில் 3 டாக்டர்கள், 3 நர்ஸ்கள் இருந்தனர். மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். இந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி மருத்துவ அமைச்சகத்தில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் ரகசியமாக விசாரணையை தொடங்கினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள பெட்களை காலி செய்வதற்காக அங்கு தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகளை பெண் டாக்டர் கொலை செய்தது அம்பலமானது. உடல் தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்கான மாத்திரைகள் தரப்பட்டுள்ளன. அதை உட்கொள்ளும் நோயாளியின் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்படும். இதையடுத்து அவர்களுக்கு செயற்கை சுவாசத்துக்காக ஆக்சிஜன் கொடுக்கப்படும். படிப்படியாக ஆக்சிஜன் சப்ளையை டாக்டரின் அறிவுரைப்படி டீமில் இருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் குறைப்பார்கள். ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் முழுவதுமாக நிறுத்தப்படும். மூச்சு திணறி நோயாளிகள் பரிதாபமாக செத்துவிடுவார்கள். ஆனால், ‘மருத்துவ ரீதியாக’ அவர்கள் குரூரமாக கொலை செய்யப்படுகிறார்கள் என்பது டாக்டர்கள், நர்ஸ்களுக்கு மட்டுமே தெரியும்.
கடந்த சில வாரங்களில் மட்டும் இதுபோல 7 நோயாளிகள் சாகடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 1700 பேர்கள் இறந்துள்ளனர். அதில் 300 நோயாளிகள் இதே பாணியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இதையடுத்து பெண் டாக்டர் டிசோசா மற்றும் அவரது டீமில் இருந்த டாக்டர், நர்ஸ் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு ஹரோல்டு ஷிப்மேன் என்ற வெள்ளைக்கார டாக்டர் 215 நோயாளிகளை கொலை செய்த சம்பவம்தான் தொடர் கொலை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது 300 நோயாளிகள் தொடர் கொலை சம்பவம் அதை மிஞ்சிவிட்டது. இதுபற்றி பெண் டாக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவசர சிகிச்சை பிரிவில் பெட்களை காலி செய்வதற்காக நோயாளிகளை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் தந்திருக்கிறார்.இந்த சம்பவத்தில் இன்னும் எவ்வளவு பணியாளர்கள், நிர்வாக குழுவில் இருப்பவர்கள் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment