Wednesday, February 27, 2013
சென்னை::ரயில்வே பட்ஜெட்டில், தொடர்ந்து, தமிழகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு வெளியில் சொல்ல முடியாத சுமையை அளித்துள்ளது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட், உயிரில்லாத, நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு, தேவையான தொலைநோக்கு திட்டமே இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம், மறைமுகமாக பயணிகள் கட்டணம் உயர்ந்து, பொதுமக்களுக்கு, சுமையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் மூலம், அத்தியாவசியப் பொருட்களின் பொருட்களின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, இதுவரை, உறுதியான திட்டங்களோ, முதலீட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளோ எடுக்கப்படவில்லை. அதிவேக சரக்கு போக்குவரத்து திட்டத்தை கொண்டுவர, முயற்சிகள் எடுக்கப்படவில்லை. மாநிலங்களில் நிறைவேற்றப்படும் புதிய ரயில் பாதைகள், நடை மேம்பாலங்கள் உள்ளிட்ட, பயணிகளுக்கான பாதுகாப்பு திட்டங்களுக்கான,செலவினங்களில், மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் பாரம்பரியமாக ஏற்று வந்த, பங்குத் தொகை, மாநில அரசுகளின் மேல் திணிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம், எரிபொருள் கட்டணம் உயர்ந்து, இதன் மூலம், அத்தியாவசியப் பொருட்கள், முக்கியமான மூலப்பொருட்களான, உணவு தானியங்கள், சிமென்ட், நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்டவற்றின் விலையையும் உயர்த்தி விடும். இதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மின் உற்பத்தியையும் பாதிக்கச் செய்யும். உப கட்டணங்களை உயர்த்தியதன் மூலம், மறைமுகமாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, பொதுமக்களை வஞ்சிக்கும் செயல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தேவைக்காக, குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை நல்க, மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இது, தவறானது என்பதுடன், மாநில அரசு மற்றும் உள்ளாட்சித்துறைகளின், முடிவெடுக்கும் அதிகாரத்தில் தலையிடுவது போலாகும். மேலும், மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த, சென்னை புறநகர் ரயில் திட்டத்தில் எந்தவித கூடுதல் சேவைகளும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே பட்ஜெட்டை பொறுத்தவரை, தொடர்ந்து, தமிழகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுவது, மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. ரயில்வே பட்ஜெட், பொதுமக்களுக்கு வெளியில் சொல்ல முடியாத சுமையை அளித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கசக்கிறது பட்ஜெட்:
சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரை பாதுகாப்பான ரயில் பயணம் என்பது, பிரம்ம பிரயத்தனமாகவே உள்ளது. பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணங்களை தமிழகத்திலிருந்து வசூலிப்பது, மத்திய அரசுக்கு இனிக்கிறது. தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைத்தல், பாதைகளை இரட்டிப்பாக்குதல், மின் மயமாக்குதல், புதிய ரயில்கள் விடுதல் போன்றவை கசக்கிறது. - - விஜயகாந்த், தலைவர், தே.மு.தி.க.,
பொதுமக்களை பாதிக்கும்:
நடைபெற்று வரும் புதிய அகலபாதை, கூடுதல் அகல பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எதிர்பார்ப்பில் இருந்த புதிய ரயில்பாதை திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை இல்லை. இதற்கிடையே, டீசல் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பு, பயணிகள் மற்றும் பொதுமக்களை பெரிதும் பாதிக்கும். வைகோ, பொதுசெயலர், ம.தி.மு.க.,
கவனிக்கச் சொல்வோம்:
கட்டண உயர்வு இல்லாமல், இருக்கின்ற நிதி ஆதாரத்துக்கு உட்பட்டு அருமையான ரயில்வே பட்ஜெட் அளிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற அறிவிப்பு இல்லாதது, திண்டுக்கல்- பொடிமெட்டு புதிய ரயில் பாதை திட்டத்தை அறிவிக்காதது குறித்து, ரயில்வே அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். ஞானதேசிகன், தமிழக காங்., தலைவர்.
No comments:
Post a Comment