Wednesday, February 27, 2013
ஜெனீவா::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டுமேயன்றி தனிமைப்படுத்தக்கூடாது என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலக ஆலோசகர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புக்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ்தர் பிரிம்மர், மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அனைத்து பிரஜைகளையும் இணைத்துக்கொண்ட தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றின் ஊடாக பூரண நல்லிணக்க நடவடிக்கையொன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரியங்கா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது எனவும் இவ்வாறான நடவடிக்கையொன்றின் ஊடாக இருவேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலக ஆலோசகர் பிரியங்கா விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment