Thursday, January 31, 2013
சென்னை::இலங்கை தமிழர்களை பிரச்னைக்கு தீர்வுக்கான, இலங்கை அரசை நிர்பந்திக்க கேட்டு கொள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ குழுவினர் டெல்லி சென்று விட்டு நேற்று மாலை திரும்பினர். அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, டெல்லி பயணம் குறித்து விளக்கினர்.அதன்பின், திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
(புலி ஆதரவு) டெசோ குழுவினர் டெல்லி சென்று அங்குள்ள வெளிநாட்டு தூதர்களை சந்தித்து, இலங்கை தமிழர் துன்ப வாழ்விற்கு விடிவு காண்பதற்கான கருத்து, திட்டங்களை விளக்கினார்கள். இந்த குழுவில் மு.க.ஸ்டா லின், கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் இந்திய குடியரசு தலைவர், மான்டி ரிகோ, அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, மலேசியா, எஸ்தோனியா ஆகிய நாட்டு தூதர்களை சந்தித்து இலங்கை தமிழர் விடிவு காலத்தை விரைவுபடுத்த உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். வருகிற 4ம் தேதி நடக்கும் டெசோ கூட்டத்தில் இந்த குழுவினர் இவற்றை விளக்குவார்கள். பின்னர், தொடர் நடவடிக்கை பற்றி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
அதன்பின் கருணாநிதி நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:
இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் இந்தியா வர திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளதே?
இப்போது தமிழ் ஈழத்தில் தமிழ் மொழி, பண்பாடு, இவற்றை அறவே ஒழிக்க சிங்கள அரசு திட்டமிட்டு அதற்கு அடையாளமாக 90 ஊர்களின் தமிழ் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றி இருக்கிறது. இலங்கை தழிழர்களை ஏற்கனவே கொன்று குவித்ததற்கு ஈடான செயலாக இந்த பெயர் மாற்றத்தை நாங்கள் கருதுகிறோம். எனவே, எங்கள் எதிர்ப்பு குரலை காட்ட, ராஜபக்சே வரும் போது எங்கள் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழுவில் தீர்மானிக்கப்படும்.
விஸ்வரூபம் படம் பிரச்னை தொடர்பாக, நான் இந்தியாவை விட்டே போகப்போகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?
இந்த பிரச்னை தொடர்பாக நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன்.
ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 47 நாட்டு தூதர்களை சந்திக்க போவதாக கூறியிருந்தீர்கள். மீதமுள்ளவர்களை எப்போது சந்திப்பீர்கள்.
இது முதல் கட்ட பயணம். இந்த குழுவினர் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுவார்கள்.
புதிய தலைமைச் செயலகத்தில் அவசரம் அவசரமாக மருத்துவமனை தொடங்கி இருக்கிறார்களே?
தமிழ்நாட்டில் நடக்கும் இதுபோன்ற காரியங்கள் பற்றி நான் என்ன சொல்ல முடியும்.
காவிரி நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே?
நீதிமன்ற தீர்ப்பின் விளைவு பற்றி கூற முடியுமே தவிர, தீர்ப்பு பற்றி கருத்து கூறக்கூடது.
ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் தீர்மானத்தின் போது அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என்று கருதுகிறீர்களா?
முக்கிய பங்காற்றும் என்று நம்புகிறோம். அதற்கு அழுத்தம் தரவே இப்போது டெசோ குழுவினர் அமெரிக்கா தூதரை சந்திதுள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெறுவதில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாக கூறி, பாடகி எஸ்.ஜானகி விருதை புறக்கணித்துள்ளாரே?
அதுபற்றி விவரம் தெரி யாது. புறக்கணித்த எஸ். ஜானகியிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment