Friday,January 25, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்குகொண்ட தமிழகம், மதுரை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளின் தூதுக்குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சு, இலங்கை வாணிபம் மற்றும் கைத்தொழில் சபைகளின் ஒன்றியம், யாழ்;ப்பாணம் வாணிப கைத்தொழில் சபை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் இலங்கை கண்காட்சி மாநாட்டு பணியகம் ஆகியவை இணைந்து மேற்படி கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இம்முறை நடைபெற்ற கண்காட்சியில் சிறப்பம்சமாக மதுரை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் பங்குகொண்ட வர்த்தக கைத்தொழில் முயற்சியாண்மை கண்காட்சிகூடங்களும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். சுமார் 7 ஆயிரம் அங்கத்தவர்களைக்கொண்ட மதுரை வர்த்தக சம்மேளனத்திலிருந்து 30 பேர் கொண்ட வர்த்தக பிரதிநிதிகள் முதற்தடவையாக இம்முறை பங்குகொண்டிருந்தனர். இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏற்றுமதி மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த 6 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவினரே அமைச்சரவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் ஏற்கனவே கொழும்பில் இடம்பெற்ற வர்த்தக கண்காட்சியில் பங்குகொண்ட தாம், யாழ்ப்பாணத்தில் பங்குகொள்வது குறித்த தமது மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்கள். இதனூடாக வடமாகாணத்திற்கான தொழில்நுட்ப பரிமாற்றம், உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல், கூட்டு முயற்சியாண்மை என்பவற்றை முன்கொண்டு செல்லமுடியும் என்பதையும் தெரியப்படுத்தினார்கள்.
குறிப்பாக கடந்த 30 வருடகாலத்திற்கு மேலான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி தமிழ்பேசும் மக்களை, தொழில்துறைசார் நடவடிக்கைகளில் ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினார்கள். அத்துடன் யாழ்ப்பாண வருகை தொடர்பாக ஆரம்பத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் தமிழ்பேசும் மக்களின் மேம்பாட்டில் அதிக ஆர்வம் கொண்டதன் காரணமாகவே பங்குகொண்டதாக தெரிவித்தனர்.
மதுரை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளின் வருகை மற்றும் பங்குபற்றல் அத்துடன் அவர்களது முயற்சியாண்மை தமிழ்பேசும் மக்களின் மேம்பாட்டு ஆர்வம் தொடர்பில் மக்களது சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம்முயற்சியில் தம்மாலான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் வழங்குவதாகவும் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்ததுடன் உள்நாட்டு அரசியல், சமுக, பொருளாதார நிலைமைகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கிக்கூறினார்.
குறிப்பாக அன்று இந்திய - இலங்கை ஒப்பந்தம் அரசியல் கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமாயின் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதை அமைச்சரவர்கள் எடுத்துக்கூறினார். எதிர்வரும் காலத்தில் இருதரப்பினரிடையேயும் வணிக, கைத்தொழில், பொருளாதார பரிமாற்றங்களை மேற்கொள்வதன் ஊடாக வடபகுதி மக்கள் தமது பாரம்பரிய சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் உற்பத்திகளை மேம்படுத்தும் அதேவேளை, எதிர்காலத்தில் அவற்றுக்கான சிறந்த சந்தை வாய்ப்பினையும் சுயபொருளாதாரத்தையும் மேம்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையினையும் அமைச்சரவர்கள் தெரிவித்துக்கொண்டார். மேலும் தமிழகத்திற்கும் இலங்கை வடபகுதி மக்களுக்கும் இடையில் சிறந்ததோர் உறவுப்பாலமாகவும் இது அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சருக்கும் மதுரை வர்த்தக சம்மேளன தூதுக்குழுவினருக்கும் இடையிலான இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தின் உதவித்தூதுவர் மகாலிங்கம் அவர்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment