Wednesday, January 30, 2013
சென்னை:: ஐ.நா.,மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் -(புலி ஆதரவு) தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை!
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- 1-2-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவை கூடுமென்றும், அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார் என்றும் அறிவிப்பு வந்த பிறகு, அரசு சார்பில் எந்த அறிவிப்பும் செய்யக் கூடாது என்ற மரபினை மீறி அன்றாடம் முதலமைச்சர் உத்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறதே?
பதில்:- 1-2-2013 அன்று சட்டப் பேரவை கூடப் போகிறது - அன்று அரசின் சார்பில் ஆளுநர் அறிவிப்புகளைச் செய்யப் போகிறார். சட்டசபை கூடப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுவிட்டாலே, அரசின் சார்பில் எந்தவிதமான அறிவிப்புகளையும் செய்யக்கூடாது. ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் ஏராளமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஆளுநர் ஆண்டுதோறும் பேரவையில் ஆற்றுகின்ற உரையிலேதான் அரசின் திட்டங்களைப் பற்றிய அறிவிப்புகளே இடம் பெற வேண்டும். ஆனால் ஆளுநர் என்ன உரையாற்றுவது, அறிவிப்புகள் எல்லாம் ஆளுநர் உரையிலே வரலாமா என்று; முதலமைச்சர் கடந்த சில நாட்களாக அரசின் அறிவிப்புகளையெல்லாம் தானே உத்தரவிட்டதாகக் கூறி அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
கேள்வி:- அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கழக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுடைய தற்போதைய நிலை என்ன?
பதில்:- தந்தை பெரியாரின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பிரதி மாதம் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத் தின்கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று.
அதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப் பேற்றது. உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆறு மாத கால அவகாசத்தைக் கேட்டுப் பெற்றது. ஆறு மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், “உச்ச நீதி மன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை. எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய சட்ட ரீதியான போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும் கருத்து அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை அ.தி.மு.க. அரசு எப்படி தொடர்ந்து நிறைவேற்றப்போகிறது என்பதை வரவிருக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலாவது அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்!
கேள்வி:- ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக செய்தி வந்துள்ளதே?
பதில்:- கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நமது வற்புறுத்தலினால் இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றினார்கள். அப்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அந்தத் தீர்மானத்தின்படி ராஜபக்சே அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதாலும், தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருவதாலும் வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசை மேலும் நிர்ப்பந்தப்படுத்தும் புதிய தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருக்கிறார். அந்தத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து நிறைவேற்றிட வேண்டு மென்பதே நமது உறுதியான வேண்டுகோள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment