Tuesday, January 29, 2013
கோபி:.தமிழக முதல்வர் அம்மா மீண்டும் டெல்லி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் பிரதமராகத்தான் செல்வார் என்று கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார். ஈரோடு புறநகர் மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் தமிழக முதல்வர் அம்மா ஆணைக்கிணங்க வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த 25ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கோபி பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையில் நகர மாணவரணி செயலாளர் ஜி.கே.இளங்கோ அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்.பி.காளியப்பன், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், நகர செயலாளர் பி.கே.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:
வீரவணக்க நாளை தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு பின் முதல்வர் அம்மா மட்டுமே கொண்டாட முடியும். இந்த நாளை கொண்டாட திமுகவுக்கு எந்த அருகதியும் கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது ராணுவத்தை கொண்டு வந்து அடக்குமுறைகளை ஏவி விட்டார்கள். அதிலிருந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எழுந்து நிற்கவே முடியவில்லை. திமுக 5 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டபோது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முடிந்ததா? செம்மொழிமாநாடு நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீண் செய்தார்கள் அம்மா ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மாநாட்டை நடத்தி காட்டினார். தமிழுக்காக வாழ்கிறோம் என்று கூறும் கருணாநிதி இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் இறந்தார்களே கருணாநிதியால் காப்பாற்ற முடிய வில்லை. உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் சக்தி முதல்வர் அம்மாவுக்கு மட்டுமே உண்டு.
டெல்லியிலே நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சொல்லும் போது பத்து நிமிடங்கள் நேரம் ஒதுக்கியது மத்திய அரசு இது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா? தினமும் தமிழக மக்களுக்காக 20 மணிநேரம் உழைத்துக் கொண்டிருக்கும் தங்கத் தலைவிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா? ஆகவே தான் எழுந்து வந்து விட்டார். வரும் போது சும்மா வரவில்லை. மறுபடியும் டெல்லி நுழையும் போது பிரதமராகத் தான் நுழைவேன் என்று சூளுரைத்து விட்டு வந்துள்ள“ர்.
இந்திய ஆறுகளில் உள்ள தண்ணீர் அனைவருக்கும் சொந்தம். யாருக்கும் தரமட்டேன் என்று எந்த மாநிலமும் மறுக்க முடியாது. தமிழகத்தில் இருந்து சென்ற திமுக, காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள், தமிழ் நாட்டின் மீது இவர்களுக்கு அக்கரை இல்லை. பாலாறு, காவேரி, முல்லைப் பெரியார் ஆகியவற்றில் தண்ணீர் தராமல் அணைக்குமேல் அணைகட்டி வருகிறார்கள். மின்சாரம் தரமறுக்கிறார்கள் எதையாவது செய்து அம்மாவின் தொலைநோக்கு திட்டங்களை தடுத்து நிறுத்தி விடலாம் என்று திமுக, காங்கிரஸ்காரர்கள் கனவு கண்டால் அந்தக் கனவு அவர்களையே விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடும்.
2013ம் ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாறும். அம்மா இந்தியாவின் பிரதமராக என்று வருகிறாரோ அன்று தான் தண்ணீர் பிரச்சனை தீரும். நதிகளை தேசியமயம் பண்ணக்கூடிய ஒரே சக்தி அம்மாவால் மட்டுமே முடியும். தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவுக்கே விடிவுகாலம் பிறக்கும்.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு. வெங்கடாசலம், சிறுபான்மைப் பிரிவு இணைச்செயலாளர் எஸ்.நாகூர்மீரான், நடிகர் ஆனந்தராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமணீதரன், பி.ஜி.நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர். செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சிந்து, ரவிச்சந்திரன், ஒன்றியக்குழுத்தலைவர் சத்தியபாமாவாசு, நகராட்சி தலைவர் ரேவதிதேவி, துணைத்தலைவர் ஜி.கே.செல்வராஜ், முன்னாள் சேர்மன் கந்தவேல்முருகன், பி.யூ.முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.
No comments:
Post a Comment