Sunday, December 02, 2012
இலங்கை::கடந்த 27ம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுள்ளார்.
கடந்தகால அழிவுயுத்தம் காரணமாக எமது மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டு மிகவும் பின்னடைவு கண்டிருந்தது. தற்போது அது படிப்படியாக சீர்செய்யப்பட்டு முன்னேறி வரும் நிலையில், அமைதிச் சூழலில் மேற்கொள்ளப்பட்டு வந்த யாழ்.பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை குழப்பும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனிமேலும் நடக்கக் கூடாது என்பதை அமைச்சர் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்து கூறியிருந்தார்.
எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் நிலையில் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதும் தீர்க்கப்பட்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக்குவதும் அவற்றின் மூலம் அரசியல் இலாபம் தேடுவது இந்த சமூக நலன் விரோத சக்திகளின் தொடரும் செயற்பாடுகளாகி உள்ளன.
இவ்வாறான விசமிகளின் தூண்டுதல்கள் காரணமாகவே யாழ்.பல்கலைக்கழகத்திலும் பதற்றநிலை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் அதுவும் எமது எதிர்கால சந்ததியினர் அறிவு பெறும் இடத்தில் இத்தகைய செயற்பாடுகளுக்கு தூண்டி எமது மக்களையும் எதிர்கால அறிவு ஜீவிகளையும் கருவறுத்துவரும் இவ்வாறான சமூக நலன் விரோத சக்திகள் தங்களுக்குரிய இடங்களில் தங்களது சொந்தங்களை வைத்து இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதில்லை என ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தென் இலங்கை போன்று வட இலங்கை கடற்றொழிலாளர்களும் எவ்வித அழுத்தங்களுமின்றி தொழில் செய்ய வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தென் இலங்கை போன்று வட இலங்கை கடற்றொழிலாளர்களும் எவ்விதமான இடையூறுகளோ, அழுத்தங்களோ இன்றி சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது யாழ்.மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், இடர்பாடுகள் தொடர்பாக அமைச்சர் இதன்போது கவனம் செலுத்தினார்.
இதன்போது குறிப்பாக தொழில் அனுமதி (பாஸ் நடைமுறை), உள்ளூர் மற்றும் வெளியூர் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், வெளிச்சக் கூடுகள் மற்றும் வெளிச்ச வீடுகளை அமைத்தல், வான் அகழ்வு, இறங்குதுறைமுகங்களை அமைப்பது மற்றும் தொழில் அனுமதிக்கு படைத்தரப்பால் மறுக்கப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் அவர்கள், கடற்றொழில்துறையை மேம்படுத்துவதற்கும், நவீனப்படுத்துவதற்கும் வங்கிகள் ஊடாக இலகு கடன்களை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கினார்.
அதன்பிரகாரம் கடற்றொழிலாளர் சங்கங்களை ஒன்றிணைத்து நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன் தடைசெய்யப்பட்ட தொழில்துறைகளை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்வரும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தென் இலங்கை கடற்றொழிலாளர்கள் எவ்விதமான இடையூறுகளும், அழுத்தங்களும் இன்றி எவ்வளவு சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரோ அதேபோன்றுதான் வட இலங்கை கடற்றொழிலாளர்களும் ஈடுபடவேண்டுமென்பதே தமது விருப்பமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் கணேசமூர்த்தி, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment