Friday, December 14, 2012
சென்னை::தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா 13.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று விசைப்படகில் இலங்கை கடற்பகுதியில், நெடுந்தீவிற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, போதைப் பொருள் கடத்தியதாக கூறி படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள மல்லாக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்றும், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இராமேசுவரம் பகுதி மீனவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஐந்து மீனவர்களை விடுவிப்பதற்கு மீனவர்கள் சார்பில் வழக்காடுவதற்கு இலங்கையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திடவும், அவர்களை விடுவிப்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள ராமேசுவரத்திலுள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு என்ற நிறுவனத்தின் மூலம் நடவடிக்கை எடுத்திடவும் வழக்கு செலவுக்காக 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியும் 14.12.2011 அன்று ஆணையிட்டார்.
தமிழக அரசின் நிதியுதவியுடன், மேற்கண்ட ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுதலை செய்திட 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 11.6.2012 அன்று மேற்கண்ட மனுவின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் இம்மீனவர்களின் குடும்பங்கள், வருமானம் ஈட்டித் தரும் தங்கள் குடும்பத் தலைவர்கள் சிறையில் உள்ளதால், அன்றாட வாழ்க்கை நடத்திட போதிய வருமானமின்றி அல்லல்படுவதை கருத்தில் கொண்டு குடும்பம் ஒன்றிற்கு மாதந்தோறும் ரூபாய் 7500/- வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா 6.8.2012 அன்று ஆணையிட்டிருந்தார்.
இந்த உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் இக்குடும்பங்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கை– கொழும்பு சிறையில் வாடும் ராமேசுவரத்தைச் சேர்ந்த இந்த ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா 13.12.2012 அன்று வழங்கினார்.
மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து நிவாரண உதவித் தொகையினை பெற்றுக் கொண்ட ஐந்து மீனவர்களின் குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment