Saturday, December 15, 2012
நியூடவுண்::அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி குழந்தைகள் உள்பட 28 பேரை கொன்றது அந்த பள்ளி ஆசிரியையின் மகன்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவனது சகோதரனை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தில் உள்ள நியூடவுண், மிகவும் பாதுகாப்பான பகுதி என்று கருத்து கணிப்பில் அதிக ஓட்டுகள் பெற்ற நகரம். இந்நகரில் உள்ள சாண்டி ஹூக் தொடக்க பள்ளியில் நேற்று 9.30 மணிக்கு டீன் ஏஜ் வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
இதில் 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சாண்டி ஹூக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் நான்சி. இவருக்கு ரியான் லான்சா (24), ஆடம் லான்சா (20) என்ற 2 மகன்கள். இவர்களில் ஆடம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இவன்தான் நேற்று காலை, தாயின் துப்பாக்கியை திருடி பள்ளியில் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளான். முதலில் வீட்டில் இருந்த அம்மா, அப்பாவை சுட்டு கொன்று விட்டு, நான்சியின் காரில் 9.30 மணிக்கு பள்ளிக்கு வந்துள்ளான். முதலில் பள்ளி பிரின்ஸ்பாலை சுட்டுக் கொன்றுள்ளான்.
பின்னர் பள்ளியில் மனநல வகுப்பு எடுக்கும் ஆசிரியரை கொன்றுள்ளான். அதன்பின், அம்மா பாடம் நடத்தும் கிண்டர்கார்டன் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த குழந்தைகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். பின்னர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். பள்ளியில் .223 கேலிபர் ரைபிள், 2 கைத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஆடம்தான் இந்த கொடூர செயல் செய்தது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவனுடைய சகோதரன் ரியான் லான்சாவை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின் ஆடமின் காதலி மற்றும் நண்பர் ஒருவர் காணாமல் போய்விட்டனர். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர். ஆனால், ஆடமை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டாலும், திட்டமிட்டே 3 துப்பாக்கிகளை எடுத்து வந்து பள்ளியில் ஆடம் தாக்குதல் நடத்தி இருக்கிறான் என்று மற்றொரு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment