Monday, November 26, 2012
நாகப்பட்டினம்: நாகை கடற்கரையில் நேற்று அதிகாலை கரை ஒதுங்கிய மர்மபடகு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.நாகை துறைமுகத்தின் தெற்குபகுதியில் நேற்று அதிகாலை விசைப்படகு ஒன்று கரை ஒதுங்கியது. படகை அடையாளம் காணமுடியாத வகையில், படகில் எழுதப்பட்டிருக்கும் பதிவு எண், பெயர் போன்றவை பெயின்டால் அழிக்கப்பட்டுள்ளது.படகில், இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. நாகையில் உள்ள டீசல் பங்க் ஒன்றில், 550 லிட்டர் டீசல் பிடித்த ரசீது ஒன்றும், மதுரையைச் சேர்ந்த ஒருவரின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ், இலங்கை நபர்களின் அடையாள அட்டைகளும் அதில் இருந்தன.
அப்பகுதியில், துணிகள், பிஸ்கட்டுகள், மாத்திரைகள் அடங்கிய, "லெதர் பேக்' மற்றும் செருப்புகள் சிதறி கிடந்தன. மர்மபடகு ஒதுங்கியிருப்பதை பார்த்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மத்திய, மாநில உளவு போலீசார், "கியூ' பிரிவு போலீசார், கடலோர காவல் படை போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மீனவர்கள் கூறியதாவது: நாகை அக்கரைப்பேட்டை மீனவர் ஒருவருக்கு சொந்தமாக இருந்த ஸ்டீல் படகு ,பல மாதங்களுக்கு முன் காரைக்கால் மேட்டைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டு, காரைக்கால் மீன்வளத் துறையில், இந்த மர்ம படகு பதிவாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்ட படகில், இரண்டு நபர்கள் மட்டுமே இருந்தனர். பழுது நீக்கம் செய்வதற்காக படகு நிறுத்தப்பட்டுள்ளதாக நினைத்தோம்.நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில் துறைமுகத்தில் இருந்து வெளியேறிய படகு, காரைக்கால் பகுதியில் ஆட்களை ஏற்றி, நாகை பகுதியில் கரை ஒதுங்கியது. படகில், 3,000 லிட்டருக்கும் மேல் டீசல், பல நாட்கள் சமைத்து சாப்பிடுவதற்கு தேவையான பொருட்கள் உள்ளன.
நாகை பகுதியில் படகை ஒதுக்கி விட்டு ஏன் தப்பினர் என்று தெரியவில்லை.அதே சமயம், அதிகாலை, 3:00 மணியளவில் பெண்கள், குழந்தைகள் அடங்கிய, 50 பேர் அழுது கொண்டே ,தங்களை ஏஜன்டுகள் ஏமாற்றி விட்டதாக புலம்பியபடி, இருந்தனர். அவர்கள் நாகை மெயின் ரோட்டிற்கு செல்ல வழிகேட்டதாக சிலர் கூறினர். அவர்கள் சோகத்துடன் இருந்தனர் என்று மட்டும் அறிந்தோம். வேறு நாடுகளுக்கு, படகில் கடத்தும் கும்பலின் வேலையோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு மீனவர்கள் கூறினர்.
கடல் பாதுகாப்பில் ஓட்டை:நாகை துறைமுகத்தில், கடற்படை, கடலோர காவல் படை, மீன்வளத்துறை முகாம்கள், துறைமுக பாதுகாப்பு அலுவலர்கள் என்று கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கஸ்டம்ஸ், கடலோர காவல்படை, துறைமுகத்திற்கு என, அனைவருக்கும் பலகோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன ரோந்து படகுகள், அரசால் வழங்கப்பட்டுள்ளன. துறைமுகத்திற்குள் உள்ளே வரும் படகுகளும், வெளியேறும் படகுகளும் கடற்படையின் முகாமை தாண்டியே செல்ல முடியும். இத்தனை இருந்தும் துறைமுகத்திற்குள் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டிருந்த படகு,தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு சாவகாசமாக வெளியேறியதோடு, துறைமுக கட்டுப்பாட்டு பகுதிக்கே மீண்டும் வந்து ஆட்களை இறக்கி விட்டு, படகை இயக்கியவர்களும் மாயமாகியுள்ளனர். கடலோர காவல் படையினர் படகை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்குவியலில் 20க்கும் மேற்பட்ட பைகள் கிடந்தன. பைகளில் துணி வகைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், குழந்தைகளுக்கான பவுடர், ஆயில், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது.
இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது: அதிகாலையில் கடற்கரையில் 10க்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்திருந்தனர். சுற்றுலா பயணிகளாக இருக்கும் என நினைத்திருந்தோம். அப்போது ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. இந்த நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதை நாங்கள் கவனிக்கவில்லை. மழை நின்றதும்தான் விசைப்படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பதும், அருகில் கிடந்த பைகளில் நிறைய உடைகள் இருப்பதையும் பார்த்தோம். அவர்கள் இலங்கை தமிழர்கள் போல் இருந்தார்கள். எனவேதான் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தோம். இந்த படகு ஓராண்டுக்கு முன் காரைக்கால் பகுதியை சேர்ந்த ஒரு மீனவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த நபர்தான் இலங்கை தமிழர்களிடம் படகை விற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு மீனவர்கள் கூறினர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: 2 நாட்களாக இந்த விசைப்படகு துறைமுகத்தில்தான் நின்றுள்ளது. துறைமுக பகுதியில் உள்ள ஒரு பங்க்கில் காரைக்கால் பதிவு எண்ணை தெரிவித்து டீசல் போட்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு முதல் இந்த படகு துறைமுகத்தில் இல்லை என்றும், எப்போது கடலுக்கு கிளம்பி சென்றது என தெரியவில்லை என்றும் மீனவர்கள் சொல்கிறார்கள். படகில் 50க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை நாகைக்கு அருகில் தெற்கு பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து படகில் ஏற்றி இருக்க வேண்டும் அல்லது அவர்களை கரையில் இருந்து பைபர் படகு மூலம் கடலுக்கு அழைத்து சென்று, கடலில் இருந்து விசைப்படகில் ஏற்றி இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
விசைப்படகு என்ஜினில் பழுது ஏற்பட்டதால் அவர்கள் கரை ஒதுங்கி இருக்கலாம். அதிக நேரம் கரையில் இருந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று சிறுசிறு குழுவாக அவர்கள் தப்பி இருக்க வேண்டும். அப்படி அவர்கள் தப்பி இருந்தால் வேளாங்கண்ணி விடுதிகளில் தங்கி இருக்கலாம். இல்லாவிடில் பஸ்சில் ஏறி அருகில் உள்ள ஊருக்கு சென்றிருக்கலாம். அவர்கள் எங்கிருந்தாலும் விரைவில் பிடிபட்டு விடுவார்கள்.
கடற்கரையில் கிடந்த உடைகள் மற்றும் பொருட்களை பார்க்கும்போது அவற்றை சென்னையில் சமீபத்தில் வாங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் இலங்கையில் இருந்து தப்பி வந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்து வெளிநாடு செல்ல முயன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எதையும் உடனடியாக சொல்ல முடியாது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். நாகை கடற்கரையில் விசைப்படகு தரைத்தட்டி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment