Monday, November 26, 2012
சென்னை: :மும்பை தாக்குதல் தினத்தையொட்டி அணுமின் நிலையங்களுக்கு இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பையில் ஊடுருவி சி.எஸ்.டி. ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபராய் ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் சமீபத்தில் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். இதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மும்பை தாக்குதல் தினமான இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், பஸ், ரயில் நிலையங்கள், கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலோர காவல் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அனைத்து ரயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடந்தது. பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment