Tuesday, November 27, 2012
சென்னை::சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன், நாளை மறுதினம் (29ம் தேதி) தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, தமிழக டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் தேவை பற்றி முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் தமிழகத்தில் எந்த அணையும் நிரம்பவில்லை. காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை கர்நாடக அரசு தர மறுத்து வருவதால் மேட்டூர் அணையும் நிரம்பவில்லை.
அணையின் நீர்மட்டம் குறைந்து இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குறைத்து விட்டனர். இந்த நிலையில், தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கை கர்நாடக அரசு தர உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 23ம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதில், இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 52.8 டிஎம்சி தண்ணீரை தரவேண்டிய கர்நாடக அரசு அதை தரவில்லை. சம்பா சாகுபடியை காக்க தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோக்கூர் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன், தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இரு மாநில முதல்வர்களும் காவிரி நீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். விட்டு கொடுத்து தீர்வு காணும் வழியை தேடுங்கள். இரு மாநில முதல்வர்களும் சம்பிரதாயத்துக்காக, காபி உபசரிப்புக்காக மட்டும் சந்திக்காமல் இரு மாநில நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்யுங்கள் என்று யோசனை தெரிவித்தனர்.
அதற்கு, கர்நாடக அரசு மூத்த வக்கீல் பாலி நாரிமன், ‘சந்திப்பு நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. கர்நாடக முதல்வர் நிச்சயம் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார் என்றார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ‘இதுதொடர்பாக முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் சம்மதம் பெற்றபின் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்ற ஆலோசனையின்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா 29ம் தேதி பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி தமிழக சட்டசபை வைரவிழா நடக்கிறது. அன்றைய தினமே சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் 29ம் தேதி காலை முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் செல்வார் என்றும், காலை 11.30 மணிக்கு ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் மீண்டும் அன்றைய தினமே சென்னை திரும்புவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களூர் செல்லும் முதல்வருடன் காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர்கள், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட பலர் உடன் செல்கின்றனர். டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் இன்றி சம்பா வயல்கள் பாளம் பாளமாக வெடித்து பயிர்கள் கருகி வருகின்றன. இதை ஆதாரத்துடன் ஷெட்டரிடம் விளக்க அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்.
No comments:
Post a Comment