Thursday, November 1, 2012

தென்மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் : பஸ் போக்குவரத்து 2ம் நாளாக முடக்கம்!

Thursday, November 01, 2012
மதுரை::தென்மாவட்டங்களில் தொடரும் பதற்றத்தால் 2ம் நாளாக இன்றும் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பஸ்நிலையங்களில் மூட்டை முடிச்சுகளுடன் பயணிகள் காத்து கிடந்தனர். தேவர் ஜெயந்தி விழாவிற்காக பரமக்குடி சென்று திரும்பிய மூவர் படுகொலை செய்யப்பட்டனர். மதுரை அருகே ரிங் ரோட்டில் கார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் 20 பேர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு ஆளான 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் திருப்புவனம் அருகே பூம்பிடாகையில் வெட்டுப்பட்ட தேமுதிக நிர்வாகி மாயாண்டி உயிரிழந்தார். பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு, படுகொலை சம்பவங்களைக் கண்டித்து மறியல்கள் எதிரொலியாக முக்கிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்றிரவு 10மணிக்கு மேல் தென்மாவட்டங்களுக்கான பஸ்களுடன், நகர், புறநகர் பஸ்களும் முழுமையாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இன்று காலை முதல் பஸ்கள் இயங்கும் என்ற நம்பிக்கையில் விடிய விடிய மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் மூட்டை முடிச்சுகளுடன் பிளாட்பாரங்களில் காத்துக் கிடந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இன்று காலை 6 மணிக்கு குறைந்த அளவில் டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான பஸ்கள் இயங்கவில்லை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்த ஒலிபெருக்கிகள் மூலம் போலீசார், Ôபஸ்கள் இயங்காதுÕ என அறிவிப்பு செய்தபடி இருந்தனர். மதுரை உள்ளிட்ட தென்மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து வாகனங்களில் வலம் வந்தும், வாகன சோதனைகளிலும் வேகம் காட்டினர். லாட்ஜ்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பதற்றமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment