Wednesday, October 31, 2012
சென்னை::வங்கக் கடலில், சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள "நிலம்' புயல், சென்னை அருகே புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 25ஆம் தேதி அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து திங்கள்கிழமை புயல் சின்னமாக உருவெடுத்தது. இந்நிலையில், அது மேலும் தீவிரமடைந்து செவ்வாய்க்கிழமை வடமேற்காக நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு "நிலம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புதன்கிழமை இரவு ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது "நிலம்' புயல் சென்னைக்கு அருகே தென்பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுவையில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும், கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் எச்சரிக்கைக் கூண்டு: புயல் உருவானதைத் தொடர்ந்து துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. சென்னையில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: புயல் தீவிரமடைந்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் 1500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் கடலோர மாவட்டங்களில் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
புயலை எதிர்கொள்ள அதிகாரிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. தாழ்வானப் பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வருவாய்த் துறை, மின்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானதால் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. சென்னை, பாம்பன், கடலூர், தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. சாதாரணமாக 2 அடி வரை எழும்பும் கடல் அலைகள், புயல் காரணமாக 6 அடி வரை எழுகின்றன.
கட்டுப்பாட்டு அறை: மழை பாதிப்பு மற்றும் அவசர உதவிகளுக்கு மாவட்டங்களில் 24 மணிநேர மழை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் குறித்த தகவல்கள் மற்றும் புகார்களைப் பதிவு செய்யலாம். மழை நிவாரண உதவிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது.
மின்உற்பத்தி பாதிப்பு: தொடர் மழையின் காரணமாக நெய்வேலி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேங்கிய மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி 700 மெகாவாட் குறைந்துள்ளதாக அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை முன்னறிவிப்பு: "நிலம்' புயல் கரையைக் கடப்பதால் மாநிலம் முழுவதும் புதன்கிழமை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்யலாம் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் - 150; வேதாரண்யம் - 120; சிதம்பரம், சீர்காழி - 110; காரைக்கால் - 100; நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - 80.
No comments:
Post a Comment