Monday, October 01, 2012
மேட்டூர்::சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று கர்றாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சாலைகளில் டயர்களை கொளுத்தி போட்டும் தடுப்புகளை ஏற்படுத்தியும் விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.
இதனால் மைசூருக்கு தமிழக பஸ்கள் நேற்று காலை முதல் ஓடவில்லை. வழக்கமாக சேலம், மேட்டூர், நாமக்கல் டெப்போக்களில் இருந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 15 பஸ்கள் மைசூர் செல்லும். அவை இன்று இரண்டாவது நாளாக ஓடவில்லை.
மேட்டூரில் இருந்து மைசூர், கொள்ளேகால். மாண்டியா பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களும் இன்று இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வேன், லாரி போன்ற சரக்கு வாகனங்களில் செல்கிறார்கள்.
மைசூரில் இருந்து மேட்டூர் வழியாக ஈரோட்டுக்கு கர்நாடக அரசு பஸ் இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. அந்த பஸ் வழக்கம்போல் ஓடுகிறது. இதேபோல தமிழ்நாட்டில் இருந்து பெங்களுர், மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலங்களுக்கு லாரிகள் அனைத்தும் வழக்கம் போல் ஓடுகின்றன.
நேற்று காலை 5 மணி முதல் ஓசூரில் இருந்து பெங்களுருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. பெங்களுரில் பதட்டம் இல்லை என்பதால் நேற்று மதியம் 2 மணிக்குப்பிறகு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
இன்று இரண்டாவது நாளாக தமிழக அரசு பஸ்கள் பெங்களுருக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் பஸ்களும், ஆம்னி பஸ்களும் வழக்கம் போல பெங்களுருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் சேலத்தில் உள்ள பல டிராவல் ஏஜென்சிகள் மைசூர் மற்றும் தலைக்காவிரி ஆகியவற்றுக்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. தற்போது அங்கு பதட்டம் நிலவுவதால் சுற்றுலாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.
No comments:
Post a Comment