Tuesday, October 30, 2012
இலங்கை::சமூகத்தின் பல்வேறு தரப்பினர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தொழில்சார் நிபுணர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தொழில்சார் நிபுணர்களின் பேரiயினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் தடையாக அமைந்துள்ளது என தொழில்சார் நிபுணர்களின் பேரவை சுட்டிக்காட்டியிருந்தது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தொழில்சார் நிபுணர்கள் வலியுறுத்தியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுவோர், புறச் சக்திகளின் வழிகாட்டல்களுக்கு அடி பணியாது, தமது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் யதார்த்தமான அணுகுமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்திய பிரச்சினைகள் காரணமாக இந்திய இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்படாது – கோதபாய ராஜபக்ஷ!
பிராந்திய மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்தமை உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகள் இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்டனியுடன் மீனவர் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதிகள் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment