Monday, October 29, 2012

13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய முற்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்குமாம் - ஹசன் அலி!

Monday, October 29, 2012
இலங்கை::மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய நாடாளுமன்றத்தில் புதிய சட்டத் திருத்தம் ஏதேனும் முன்வைக்கப்பட்டால் அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும் என்று செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசியல் அமைப்பில் இருந்து நீக்குவதற்கு, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதாயின் அதனை மாகாண மட்டத்தில் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள இனவாத கட்சிகள் மாத்திரம் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. அவர்களின் இந்த செயற்பாடு மிகவும் ஆச்சரியமானது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹசன் அலி, தேசியப் பிரச்சினைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும், வாக்குறுதியளித்துள்ளதால், இந்த அரசியல் அமைப்புத் திருத்தத்தை அடிப்படையாக கொண்டு, ஜனாதிபதி நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வை வழங்குவார் என தான் நம்புவதாகவும் ஹசன் அலி கூறியுள்ளார்.

உலகில் வேறு நாடுகளில் இதனை விட அதிகளவான மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்களை கவனத்தில் கொண்டு அந்த நாடுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறான நாடுகள் தற்போது உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியுள்ளன. ஒவ்வொரு பிரதேசத்திற்குரிய பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட மாகாண சபைகளின் ஊடாக தீர்த்து கொள்வது சிறந்தது எனவும் ஹசன் அலி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment