Sunday, September 30, 2012
இலங்கை::கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லையே என்ற கூட்டமைப்பின் ஆதங்கம் முஸ்லிம் காங்கிரஸ் மீது கண்டனக் கணைகளாக வெளிப்படுகின்றது. மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்காக நிச்சயம் பாடம் படிப்பார் என்று சுரேஷ் பிரேமச்சந்திரனும், முஸ்லிம்கள் அளித்த மக்களாணைக்கு முஸ் லிம் காங்கிரஸ் துரோ கம் செய்துவிட்டது என்று சம்பந்தனும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவர்களது இக்குற்றச் சாட்டில் எவ்வளவு நியாயம் இருக் கின்றது என்பதற்கு அப் பால் இவர் களுக்கு மு.காவை சிறிதளவேனும் குற்றம்சாட்ட முடியாத அளவிற்குக் காரணங்களும் உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபையை நிராகரிக்கின்ற ஒரு கட்சி. மாகாண சபை என்பது எவ்வித அதிகாரமும் இல்லாத பொம்மை அமைப்பு என்று இன்று வரை கூறுகின்றது. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்க் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள் என்பதைச் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகப் பகிரங்கமாகக் கூறியது. சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு காலத்தில் மாகாண சபையை ஆதரித்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த பின் அவருடைய நிலைப்பாடும் மாறிவிட்டது. ஒட்டுமொத்தமாக மாகாண சபையை நிராகரிப்பவர்கள் அதன் ஆட்சி யதிகாரம் கிடைக்கவில்லையே என்பதற்காக ஆத்திரப்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது?
வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகள் பாதகமாக எத்தனை காரணிகள் இருந்தாலும் சாதகமான ஒரு பொயின்ரை மாத்திரம் தூக்கி வைத்து மணிக்கணக்காக வாதம் செய்வார்கள். சம்பந்தனும் ஒரு முன்னணி சட்டத்தரணி. அந்தப் பாணியில் முஸ்லிம்கள் வழங்கிய மக்களாணை பற்றிப் பேசுகின்றார். முஸ்லிம் காங்கிரஸ் அதன் தேர்தல் பிர சாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசிய பேச்சுகளுக்காகவே மக்கள் அத ற்கு வாக்களித்தார்கள் என்றும் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் அந்த மக்களாணைக்குத் துரோகமிழைத்து விட்டார்கள் என்றும் சம்பந்தன் கூறுவது அப்பட்டமான சட்டத்தரணி வாதம்.
முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தின் போது அரசாங்கத்துக்கு எதிரான கருத் துக்களை மாத்திரம் கூறவில்லை. தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் சேர்ந்து செயற்பட முடியாது என்றும் கூறினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முஸ் லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்கள். தேர்தலில் தனியாகப் போட்டியிடுகின்ற போதிலும் அரசாங்கத் தோடு சேர்ந்தே ஆட்சி அமைப்போம் என்றும் கூறினார்கள். இதுவும் முஸ்லிம்கள் வழங்கிய மக்களாணைதானே.
பிரசாரத்தின்போது அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியவர்கள் அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கேற்பது துரோகத் தனமானது என்றால் நிராகரித்திருக்க வேண்டும். ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று கூறியிருக்கக்கூடாது. முஸ்லிம் காங்கிரஸ் எவ்வளவுக்கு அரசாங்கத்தை விமர்சித்ததோ அதனிலும் கூடுதலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்தது. பரிசீலிப்போம் என்பது சம்மதத்துக்கு முதல் படி என்று எல்லோருக்கும் தெரியும். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் ஆட்சியில் இணையச் சம்மதம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று அடைக்கலநாதன் சம்பந்தனைப் பிணை எடுக்க முயற்சித்தது வெறுமனே ஒரு நாடகமே. சம்பந்தன் பரிசீலிப்போம் என்று கூறுவதற்கு முன்னரே கிழக்கில் தேசிய அரசாங்கம் என்றும் கூட்டமைப்பும் பங்குபற்றும் என்றும் கூட்டமைப்பிற்குச் சாதகமான யாழ்ப்பாண சிறுபத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டதோ இல்லையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி கொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறும் இவர்கள் எவ்வாறான தீர்வைப் பெற்றுத் தரும் என்பதைக் கூறுவதில்லை. அவர்களால் அதைச் சொல்ல முடியாது. சர்வதேச சமூகம் இனப்பிரச்சினையின் தீர்வில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்பது கூட்டமைப்புத் தலைவர்களுக்குத் தெரியும். ஆனால், சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.
சர்வதேச சமூகம் எவ்வாறான தீர்வைப் பெற்றுத் தரும் என்பது பற்றி எதுவும் கூறக்கூடாது என்பதில் கவனமாக இருந்த கூட்டமைப்புத் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது கோட்டைவிட்டு விட்டார்கள். முழுமையான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அரசியல் தீர்வைச் சர்வதேச சமூகம் பெற்றுத் தரும் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள். அந்த நம்பிக்கை இவர்களுக்கு வாக்குகளாகக் குவிந்தது. இது இவர்களுக்குக் கிடைத்த மக்களாணை. மற்றவர்கள் பற்றி விமர்சித்துக் கொண்டி ராமல், சர்வதேச சமூகத்தின் மூலம் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவது தான் மக்களாணைக்கு விசுவாசமான செயற்பாடு.
எஸ்.சுரேஷ்
No comments:
Post a Comment