Sunday, September 30, 2012
இலங்கை::அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் யாவும் தனிச் சிங்களத்தில் அனுப்பி வைக்கப்படுவதால் அதிகாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள மொழியில் கிடைக்கின்ற சுற்றறிக்கைகள், கடிதங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய பிரதேச செயலகங்களில் மொழி பெயர்ப்பாளர்கள் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலைமையைச் சுட்டிக் காட்டி மாவட்ட செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்களை தமிழ் மொழியில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கம், அம்பாறை மாவட்ட செயலாளருக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்ற சுற்றறிக்கைகள், கடிதங்கள் யாவும் தனிச் சிங்கள மொழியிலேயே அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நிர்வாக ரீதியாகப் பிரதேச செயலகங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன், மொழி பெயர்ப்பாளர்களும் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன.
அதேபோல் பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமான விடயங்கள், விபரங்கள் யாவும் இங்கு சிங்கள மொழியில் கோரப்படுவதனாலும், அபிவிருத்திக்குப் பொறுப்பான அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் போன்றோரும் பல சிரமங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
தமிழ் மொழி அரச கரும மொழியாக சட்ட அமுலாக்கம் செய்யப்பட்டிருந்தும் கூட அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வரும் சகல ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே அமைந்திருப்பதும் இங்கு கவலை தரக்கூடியாகவுள்ளது. இது நிர்வாக ரீதியான செயற்திட்டங்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
எனவே இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி மாவட்ட செயலகத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு தழிழ் மொழி பெயர்ப்பாளரை நியமித்து தமிழ் மொழியில் சுற்றறிக்கைகள், கடிதங்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுவின் பிரதியொன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென தொரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment