Friday, September 28, 2012

பொம்மை இல்ல, பொம்மை இல்ல.. உண்மை..’ ஒன்றரை அடி கார் கின்னஸ் சாதனை!!

Friday, September 28, 2012
டோக்கியோ::ஜப்பான் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கிய மினியேச்சர் கார் ‘உலகிலேயே குட்டியூண்டு’ என்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஜப்பானின் அசாகுச்சி நகரில் உள்ளது ஒகாயமா சானியோ உயர்நிலை பள்ளி. இப்பள்ளியின் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து மினி கார் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் மொத்த உயரம் 18 இஞ்ச் (ஒன்றரை அடி). பஸ் டயரைவிட குட்டையாக இருக்கிறது இந்த கார். 6 பேட்டரிகள் உதவியுடன் இயங்குகிறது. ஜப்பானின் சி.க்யூ. கார் நிறுவனத்தின் மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரை இயக்குவதற்கான பகுதிகளை பைக் பாகங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். காரின் சேஸிஸ், பாடி, சஸ்பென்ஷன், ஸ்டீரிங், விளக்குகள், சீட் என காரின் அத்தனை பாகங்களையும் மாணவர்களே உருவாக்கி இருக்கின்றனர். ‘எதிர்காலம்’ என்று பொருள்படும் வகையில் இந்த குட்டி காருக்கு ‘மிராய்’ என்று ஜப்பானிய மொழியில் பெயர் வைத்திருக்கிறார்கள். ‘உலகிலேயே குட்டியூண்டு வாகனம்’ என்று மிராய் தற்போது கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.

இங்கிலாந்தின் டார்சட் பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஷாப் மேனேஜர் ஆன்டி சாண்டர்ஸ் மூன்றே நாட்களில் உருவாக்கிய ‘ஃபிளாட் அவுட்’ என்ற 21 இஞ்ச் கார்தான் உலகிலேயே சிறியது என்று சாதனை படைத்திருந்தது. ஜப்பான் மாணவர்களின் ‘மிராய்’ கார் அதை முறியடித்துவிட்டது. 2013-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிராய் இடம்பெற உள்ளது. இதைவிட சிறிய பொம்மை கார்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், சாலையில் ஓடக்கூடிய கார்களில் உலகிலேயே சிறியது மிராய்தான் என்கின்றனர் கின்னஸ் அதிகாரிகள்.

No comments:

Post a Comment