Wednesday, August 22, 2012

சிங்கள, தமிழ் கடும் போக்காளர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்!

Wednesday, August 22, 2012
இலங்கைதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) மாநாட்டுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போது இலங்கையில் சில சிங்கள தலைவர்களுக்கு அது வாயில் அவல் போட்டது போலாகியது. நீண்ட காலமாக அவர்களுக்கு மேடைகளில் பேசுவதற்கு சரியான விடயதானம் இருக்கவில்லை.

புலிகளைப் பற்றிப் பேச புலிகளும் இல்லை. சம்பந்தனின் மட்டக்களப்பு உரையைப் பற்றியும் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கவும் முடியாது.

நீண்ட காலமாக ஏறத்தாழ காணாமற் போயிருந்த தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் பிரமுகர் டாக்டர் குணதாச அமரசேகர டெசோ மாநாடு தொடர்பான செய்திகள் வெளிவர ஆரம்பிக்கவே பத்திரிகையாளர் மாநாடொன்றின் போது டெசோ மாநாட்டுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார். புலிகள் அமைப்பு அழிக்கப்ட்ட போதிலும் தமிழீழத்திற்கான போராட்டம் தொடர்கிறது என்றும் இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவும் டெசோ மாநாட்டைப் பற்றி கடந்த வாரம் தமது கருத்தை தெரிவித்து இருந்தார். பிரபாகரன் தமிழீழத்திற்காக பயங்கரவாதத்தை உபயோகித்து வந்த போது அதற்கு அரசியல் ரீதியாக துணையாகவிருந்தவர்கள் தமது நடவடிக்கைகளை தொடர்வதாகவும் தமிழ்நாட்டுத் தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலம்பெயர் தமிழர்களும் ஓரணியாக நின்று தமிழீழத்தை அடைவதற்காக முயற்சிப்பதாகவும் இந்த முயற்சியை எவ்வகையிலும் முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

சிங்கள தீவிரவாத கருத்துக்களைக் கொண்டவர்கள் கருணாநிதி உண்மையிலேயே தமிழீழத்திற்காக பாடுபடுகிறார் என இவ்வாறு கூறும்போது சில தமிழ் தலைவர்கள் அதற்கு மாற்றமாக கருணாநிதி இழந்த தமது அரசியல் செல்வாக்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக தமழீழத்தை சுலோகமாக பாவிக்கிறாரே தவிர அதற்காக அவர் நேர்மையாக செயற்படவில்லை என கூறுகின்றனர்.

டெசோ அமைப்பு 1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஆரம்ப தலைவர்களில் ஒருவராக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனும் இருந்தார். ஆனால் இம்முறை கருணாநிதி டெசோ மாநாட்டை கூட்ட திட்டமிட்ட போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக உலகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டே கருணாநிதி டெசோ மாநாட்டை கூட்ட வேண்டும் என நெடுமாறன் கூறியிருந்தார்.

புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையே கடைசிப் போர் நடக்கும் போது இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தின் போர் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அப்போது கருணாநிதியின் தி.மு.க.வும் மத்திய அரசாங்கத்தில் இருந்ததாகவும் கூறிய நெடுமாறன் அப்போது அந்த அழிவுகளை நிறுத்த கருணாநிதி செயற்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழ்நாட்டில் அரசியலவாதியும் நடிகருமான விஜயகாந்தும் இதே கருத்தை வெளியிட்டு இருந்தார். பிரபாகரனின் மரணத்திற்கு கருணாநிதியே காரணம் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையில் சில தமிழ் தலைவர்களும் கருணாநிதி டெசோ மாநாட்டை நேர்மையான நோக்கத்தில கூட்டவில்லை என்றே கூறியிருந்தனர். டெலோ கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ காந்தா டெசோ மாநாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில் போரின் உச்சக் கட்டத்தின் போது கைகட்டி நின்ற கருணாநிதி இப்போது டெசோ மாநாட்டை கூட்டுவது நேர்மையான செயலல்ல எனக் கூறியிருந்தார்.

டெசோ மாநாட்டுக்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கனேசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இறுதி நேரத்தில் மனோ கனேசன் மாநாடடில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்தார். ஆதற்கு காரணம் கூறும் போது அவர் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட தமக்குத் தேவையில்லை உன்றே கூறியிருந்தார்.

டெசோ மாநாடு இலங்கை தமிழருக்காக கூட்டப்படுவதாகவே கூறப்பட்டது. அவ்வாறு இருக்க அது தமிழநாட்டு அரசியலாவது எப்படி? அதாவது கருணாநிதி தமது அரசியலுக்காக டெசோ மாநாட்டை கூட்டுகிறார் என்று மனோ கனேசனும் நினைக்கிறார் போலும்.

இது விந்தையானதோர் நிலைமையாகும். தீவிர கருத்துடைய தமிழ் தலைவர்கள் தமிழ் ஈழ கோரிக்கைக்கு புத்துயிரளிப்பதற்கென கருணாநிதி மேற்கொள்ளும் முயற்சியை நேர்மையற்றச் செயல் எனக் கூறும் போது தீவிர கருத்துக்களைக் கொண்ட சிங்கள் தலைவர்கள் அது நேர்மையான முயற்சி என்றும் அதனை முறியடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டுத் தலைவரகளின் கூற்றுக்களை பாவித்து இலங்கையில் சில சிங்கள தலைவர்கள் இலங்கை மக்களின் மனதில் அச்ச உணர்வை ஊட்டி அரசியல் லாபம் தேட முயற்சிப்பதைப் போலவே இலங்கையில் தீவிர கருத்துள்ள சிங்கள அரசியல்வாதிகளின் கூற்றுக்களை தமிழ்நாடடு மக்களை ஆத்திரமுட்டி அரசியல் நடத்த அங்கு அரசியலவாதிகளும் பாவிக்கிறார்கள். முள்ளிவாய்க்கலைப் பற்றி அண்மையில் ஒரு அமைச்சர் கூறியதை தமிழ்நாட்டுத் தலைவர்கள் எவ்வாறு பாவித்தார்கள் என்பது அதற்கு உதாரணமாகும்.

ஆனால், இவ்விரு சாராரினதும்; தேசப்பற்றின் அளவு உலகறிந்த விடயமாகும். கருணாநிதியின் இன உணர்வை தமிழ் தலைவர்களே விமர்சிக்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா போர் உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருந்த வேளை அதாவது 2008ஆம் ஆண்டு இறுதியில் ‘சாதாரண மக்கள் கொல்லப்படுவது எந்தவொரு போரின் போதும் தவிர்க்க முடியாதது’ என்னு கூறியவர்.

இலங்கையிலும் சிலர் ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க குழுவொன்றை நியமித்த போது தேசப்பற்றை காட்டிக் கொண்டு கொதித்தெழுந்தனர். விமல் வீரவன்ச ‘சாகும் வரை’ உண்ணாவிரதமும் நடத்தினார். ஆனால் அதே ஐ.நா. குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்;ய திட்டமிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை ஏற்றுக் கொண்ட போது இவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்து விட்டனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தேசப்பற்றின் காரணமாக கடுமையாக விமர்கித்தவர்கள் அரசாங்கம் அதே நவநீதம்பிள்ளைக்கு இலங்கை;கு வருமாறு கடந்த மாதம் அழைப்பு விடுத்த போது அதொன்றும் தெரியாதவர்களைப் போல் இருந்து விட்டனர். ஆனால் தமிழநாட்டுத் தலைவர்களைப் பார்த்து கர்ஜித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சுருக்கமாக கூறுவதாயின் இலங்கையின் சிங்கள தீவிரவாத கருத்துக்களை கொண்ட அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாட்டு தீவிரவாத அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டு தீவிரவாத அரசியல்வாதிகளுக்கு இலங்கையின் தீவிரவாத கருத்துக் கொண்ட அரசியல்வாதிகளும் அவரவரது அரசியலை நடத்த உதவிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையிலுள்ளவர்கள் தமிழ்நாட்டிலிருந்து நல்ல செய்தி வருவதை விரும்பவில்லை. தமிழ்நாட்டுத் தலைவர்களும் இலங்கையிலிருந்து நல்ல செய்தி வருவதை விரும்பவில்லை.

நன்றி-எம்.எஸ்.எம். ஐயூப்-tm

No comments:

Post a Comment