Thursday, August 2, 2012

புனே குண்டுவெடிப்பு எதிரொலி, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு : அன்னா ஹசாரே உண்ணாவிரத வளாகத்தில் வெடிகுண்டு சோதனை!

Thursday,August 02,2012
புதுடெல்லி::மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று இரவு 5 இடங்களில் குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, டெல்லியில் நாடாளுமன்றம் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புனே நகரில் ஜங்லி மகராஜ் சாலையில் நேற்றிரவு 7.28 மணிக்கு தொடங்கி 7.35க்குள் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. ஒரு குண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. இந்த குண்டுகள் மிகவும் சக்தி குறைவாக இருந்தன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவர் மட்டுமே காயம் அடைந்தார். அவர் டெய்லர் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கும், குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை என போலீசார் தெரிவித்தனர். எந்த அமைப்பும் இதுவரை குண்டுவெடிப்புக்கு பொறுப்பு ஏற்கவில்லை. மக்களிடையே பீதியை உண்டாக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புனேயில் அன்னா குழுவினர் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு 100 மீட்டர் தொலைவில் ஒரு குண்டு வெடித்தது. இதுகுறித்து அன்னா குழுவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்த பின்னரே குண்டுவெடித்த விபரம் அவர்களுக்கு தெரியவந்தது. அந்த அளவுக்கு டம்மி குண்டுகள் தான் நேற்று புனேயில் வெடித்தன. இருப்பினும் இந்த தாக்குதலை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது என போலீசார் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றம், செங்கோட்டை உள்பட முக்கிய கட்டிடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு வெகு தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ஜந்தர் மந்தரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். உண்ணாவிரத மேடைக்கு செல்லும் 3 வழிகளில் இரண்டு வழிகள் அடைக்கப்பட்டன. பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை ஒட்டிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா கேட் அருகேயும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment