Friday, August 31, 2012

அடுத்த மாதத்துக்குள் 70 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!

Friday, August 31, 2012
சென்னை::பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை தடுப்பதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் இலவச பஸ்-பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பஸ் பாஸ் ‘ஸ்மார்ட்’ கார்டு வடிவில் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது. சென்னையில் 3.30 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட தமிழகம் முழுவதும் 22.77 லட்சம் பள்ளி மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.

ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்படுவதால் இந்த ஆண்டு தாமதமானது. கிராமப்புறங்களில் பள்ளிகள் தொடங்கி 3 மாதம் ஆகியும் பஸ் பாஸ் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அரசு பஸ்களில் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

அதனால் பள்ளி சீருடையுடன் வரும் மாணவ-மாணவிகள் பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் பஸ்களில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அதன்பிறகும் பல பகுதிகளில் இலவச பஸ் பாஸ் இல்லாத பள்ளி மாணவர்களை பஸ் கண்டக்டர்கள் பாதி வழியில் இறக்கி விடுவதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முயற்சித்தனர்.

விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்டு மாதத்திற்குள் பஸ் பாஸ் கொடுத்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனாலும் தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து நிறுவன அதிகாரி கூறியதாவது:-

புதிய முறையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்படுவதாலும் பள்ளிகளில் இருந்து வழங்கப்பட்ட விலாசங்களில் எழுத்து பிழைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டது.

மேலும் மாணவர்கள் விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அடுத்த முறை இதுபோன்ற தாமதம் ஏற்படாது. இதுவரை 22 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 70 ஆயிரம் பேருக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும். அனைவருக்கும் செப்டம்பர் இறுதிக்குள் பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment