Tuesday, August 21, 2012

மண்டபம்:கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 சிறைபிடிப்பு!

Tuesday, August 21, 2012
மண்டபம்::கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை, விசை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். 10 படகுகளில் வலைகளை கத்தியால் அறுத்தெறிந்தும், 50க்கும் அதிகமான மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கியும் விரட்டி அடித்தனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோடியக்கரை அருகே கடந்த 18ம் தேதி மீன்பிடித்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கி விரட்டியடித்தனர். இந்த தாக்குதலுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உறுதியான, நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசை திமுக தலைவர் கருணாநிதியும், மத்திய அரசை ஜெயலலிதாவும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து மீனவர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக மீனவ பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் சந்திக்க ஏற்ணீபாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 633 விசை படகுகளில் 2,500க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு சென்றனர். பகல் வேளையில் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்கள் மாலையில் கச்சத்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இரவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து திரும்பி சென்றனர். இதையடுத்து கச்சத்தீவு அருகே மீனவர்கள் நள்ளிரவில் மீன்பிடிக்கும் பணியை மீண்டும் தொடர்ந்தனர். அப்போது 4 படகில் இலங்கை கடற்படையினர் மீண்டும் ரோந்து வந்தனர். அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 10 விசை படகுகளின் வலைகளை கத்தியால் அறுத்தெறிந்தனர். 50க்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

படகுகளின் கீழ் பகுதியில் பதுங்கியதால் தாக்குதலில் இருந்து மீனவர்கள் தப்பினர். நடுக்கடலில் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படையினர், தங்கச்சி மடத்தை சேர்ந்த டெலிசன், அந்தோணி பிச்சை, தேவசகாயம் ஆகியோரது 3 விசை படகுகள், மீனவர்கள் தவமணி, செல்வம், கோபி, மாரி உள்பட 16 பேரை சிறைபிடித்து சென்றனர். இதனால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை தலைமன்னார் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். இதனால் அச்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இரவோடு இரவாக குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.

கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரை சிறைபிடித்து சென்றனர். அவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாம்பன் மீனவர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் உள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள அந்த 5 மீனவர்கள், இலங்கை கோர்ட்டில் நாளை
ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:

ஒரு வாரத்துக்கு பிறகு சில நாட்களாக மீன்பிடிக்க சென்றோம். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் மீனவர்களை கச்சத்தீவில் மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தங்கச்சிமடம் மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முதல் நாள் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்கின்றனர். இதனால் அவர்களை விடுதலை செய்யாமல் மீண்டும், மீண்டும் சிறையில் அடைக்க இலங்கை கடற்படை திட்டமிட்டு வருகிறது. தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மீனவர்கள் கூறினர். 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதால் ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுகிறது.

No comments:

Post a Comment