Friday, June 1, 2012

சரத் பொன்சேகா தொடர்பில் ஐ.தே.க கவலைப் படவில்லை – விக்கிலீக்ஸ்!

Friday, June, 01, 2012
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவலைப்படவில்லை என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அதாவது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிட்டார்.

சரத் பொன்சேகா சுயாதீனமாக இயங்குவதனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை என கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

'சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், பெயரளவு தலைவராக பதவி வகிக்க ஒப்புக் கொள்வார்' என ரணில் விக்ரமசிங்க, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

' அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளல் அல்லது பெயரளவுத் தலைவராக பதவி வகித்தல் ஆகிய சில வாய்ப்புக்களே சரத் பொன்சேகாவிற்கு காணப்படுகின்றது' என குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா ஏதேச்சாதிகாரமான தீர்மானங்களை எடுத்தால் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சிரேஸ்ட தலைவர்கள் கருதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு வலுவான அரசியல் கட்சியொன்றோ அரசியல் பின்னணியோ கிடையாத காரணத்தினால் தனித்து இயங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் என அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment