Friday, June, 08, 2012இலங்கை::வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற வேண்டும் எனத் தெரிவித்து கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார மற்றும் தகவல்கள் தொழில்நுட்பக்கல்வி அமைச்சர் எம்.எஸ்.சுபைர் முன்வைத்த இந்தப் பிரேரணையை நிறைவேற்றிய மாகாணசபை, அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி 18,000 குடும்பங்களைச் சேர்ந்த 70,000 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக கிழக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 21 வருடங்கள் கடந்துள்ள நிலையில் 27,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும், அவர்களில் சுமார் 20,000 குடும்பங்கள் வடபகுதியில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இம்மக்கள் சகல அடிப்படை வசதிகளுடனும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும், அதற்கு அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment